மதுரை செக்கானூரணி அரசு கல்லூரி விடுதியில், ஐடிஐ மாணவர் நிர்வாணமாக்கி ராகிங் செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த கொடூர செயலை வீடியோ எடுத்துப் பரப்பிய 3 மாணவர்கள் மீது காவல்துறை வழக்குப் பதிவு செய்துள்ளது.
மதுரை செக்கானூரணி அரசு கல்லூரி விடுதியில், ஐடிஐ மாணவர் ஒருவர் பாலியல் ரீதியாக துன்புறுத்தப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சமூக வலைத்தளங்களில் பரவிய காணொளி மூலம் இந்தச் சம்பவம் வெளிச்சத்திற்கு வந்த நிலையில், குற்றம் சாட்டப்பட்ட மூன்று மாணவர்கள் மீது மதுரை மாவட்டக் காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். விடுதிக் காப்பாளர் இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
ஆடைகளைக் களைந்து தாக்குதல்
செக்கானூரணியில் உள்ள அரசு தொழிற்பயிற்சி நிறுவனத்தில் (ITI) முதலாம் ஆண்டு படித்து வரும் 15 வயது மாணவர், அரசு கல்லர் கல்லூரி விடுதியில் தங்கியுள்ளார். அங்கு அதே விடுதியில் தங்கியிருந்த 17 வயது மாணவர்கள் மூன்று பேர், அந்தச் சிறுவனை நிர்வாணப்படுத்தி தாக்கியுள்ளனர். மேலும், இந்தச் செயலை அவர்கள் காணொளி எடுத்து சமூக வலைத்தளங்களில் பரப்பியுள்ளனர்.
இந்த காணொளியைக் கண்ட சிறுவனின் பெற்றோர் காவல் துறையினரிடம் புகார் அளித்துள்ளனர். புகாரின் அடிப்படையில், செக்கானூரணி காவல் துறையினர், துன்புறுத்தலில் ஈடுபட்ட மூன்று மாணவர்களையும் பிடித்து விசாரணை செய்து வருகின்றனர்.
சாதிவெறி காரணமா?
சமூக வலைத்தளங்களில் பரவிய தகவலின்படி, இந்தச் சம்பவம் சாதிய ரீதியான தாக்குதல் என்று கூறப்பட்டது. ஆனால், பாதிக்கப்பட்ட மாணவர் தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்தவர் அல்ல என்று காவல் துறையினர் தெளிவுபடுத்தியுள்ளனர். மேலும், இந்தச் சம்பவம் குறித்து விரிவான விசாரணை நடைபெற்று வருவதாகக் காவல்துறை தெரிவித்துள்ளது.
விடுதி வார்டன் சஸ்பெண்ட்
மாணவர்களின் பாதுகாப்பை உறுதி செய்யத் தவறியதாகக் கூறி, கல்லர் கல்லூரி விடுதி வார்டன் உடனடியாகப் பணியிடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார். கல்வித்துறை அதிகாரிகளும் இந்தச் சம்பவம் குறித்து தனி விசாரணை தொடங்கி உள்ளனர். இந்தச் சம்பவம் மாணவர்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளதுடன், கல்வி நிறுவன விடுதிகளின் பாதுகாப்புக் குறித்து கேள்விகளை எழுப்பியுள்ளது.
