Asianet News TamilAsianet News Tamil

பொங்கலுக்கு மீனவர்கள் தாயகம் வரவேண்டும்..கிருமிநாசினி தெளிப்பதெல்லாம்..! டென்ஷனாகி கடுகடுத்த நீதிபதிகள்

மீனவர்கள் மீது  கிருமி நாசினி தெளிப்பது, மனிதாபிமானம் இல்லாத செயல் என்றும் இலங்கை அரசால் கைது செய்யப்படும் இந்திய மீனவர்கள் கண்ணியத்துடனும், மனிதாபிமானத்துடனும் நடத்தப்பட வேண்டும் என்பதை மத்திய அரசு உறுதிப்படுத்த வேண்டும் என்றும் உயர்நீதிமன்ற மதுரைகிளை தெரிவித்துள்ளது.
 

Madurai high court
Author
Madurai, First Published Dec 31, 2021, 3:13 PM IST

ராமநாதபுரத்தைச் சேர்ந்த வழக்கறிஞர் தீரன்திருமுருகன், உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் மனுவினைத் தாக்கல் ஒன்று செய்திருந்தார். அதில், "ராமேஸ்வரம், புதுக்கோட்டை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த 68 மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டு இலங்கை சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். மருத்துவ பரிசோதனை என்ற பெயரில் மீனவர்கள் மீது இலங்கை நாட்டின் சுகாதாரத்துறையினர் கிருமிநாசினி தெளித்தது ஏற்புடையதல்ல. இந்திய மீனவர்களை பாதுகாப்பாக விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென தமிழக முதல்வர் உள்ளிட்டோர் ஒன்றிய அரசை வலியுறுத்தியுள்ளனர். குஜராத் மீனவர்கள் பாகிஸ்தான் கடற் படையினரால் சுடப்பட்டதில் ஒருவர் இறந்தார். இந்த விவகாரத்தில் உடனடியாக செயல்பட்ட ஒன்றிய அரசு, பாகிஸ்தான் தூதரை அழைத்து கடுமையாக எச்சரித்தது. ஆனால், நமது மீனவர்கள் 68 பேரை மீட்க எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனவே, நீதிமன்றம் தலையிட்டு 68 இந்திய மீனவர்களையும் விடுவிக்க உரிய நடவடிக்கை எடுக்குமாறும், அவர்களுக்குத் தேவையான சட்ட உதவிகளை மேற்கொள்ளுமாறும் உத்தரவிட வேண்டும்" என கூறியிருந்தார்.

Madurai high court

இந்த மனு நீதிபதிகள் சி.வி.கார்த்திகேயன், ஸ்ரீமதி அமர்வு முன்பாக விசாரணைக்கு வந்தது. மத்திய அரசு தரப்பில், பதில் மனு தாக்கல் செய்யப்பட்டது. அதில், "68 இந்திய மீனவர்களும் கைது செய்யப்பட்டு இலங்கை சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். இதில் 2 பேர் சிறார்கள் என்பதால் அவர்களை சரியான முறையில் நடத்துவதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இந்திய மீனவர்கள் கைது செய்யப்படும் பொழுது கண்ணியத்துடன் நடந்து கொள்வதற்காக இலங்கை அரசுடன் பேச்சுவார்த்தை நடைபெற்றுள்ளது. மேலும் கைது செய்யப்பட்ட 68 மீனவர்களும் அவர்கள் குடும்பத்துடன் தொலைபேசி மூலம் பேசுவதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. விரைவாக 68 இந்திய மீனவர்களும் இந்தியா அழைத்து வருவதற்கான அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன" என தெரிவிக்கப்பட்டது.

Madurai high court

இதனையடுத்து நீதிபதிகள், கொரோனா பரிசோதனை செய்ய வேண்டுமென்றால் மீனவர்களை தனிமைப்படுத்தி அதன்பின்பு பரிசோதனை செய்யலாம். மீனவர்கள் மீது  கிருமி நாசினி ஊற்றி இருப்பது மனிதாபிமானம் இல்லாத செயல். இலங்கை அரசால் கைது செய்யப்படும் இந்திய மீனவர்கள் கண்ணியத்துடனும், மனிதாபிமானத்துடனும் நடத்தப்பட வேண்டும் என்பதை மத்திய அரசு உறுதிப்படுத்த வேண்டும்" என கருத்து தெரிவித்தனர். தொடர்ந்து, மீனவர்கள் குடும்பத்துடன் தொலைபேசி மூலம் பேசுவதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டு இருப்பது பாராட்டுக்குரியது. மேலும் மத்திய அரசு தூதரக ரீதியான நடவடிக்கைகளை தொடர்ந்து மேற்கொண்டு பொங்கல் திருநாளுக்கு முன்பாக மீனவர்களை இந்தியா அழைத்து வருவார்கள் என நீதிமன்றம் நம்புகிறது என தெரிவித்து, வழக்கு விசாரணையை ஜனவரி 7ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனர்

Follow Us:
Download App:
  • android
  • ios