Asianet News TamilAsianet News Tamil

மக்களவைத் தேர்தல் 2024: மதுரை, திண்டுக்கல் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் வேட்பாளர்கள் அறிவிப்பு!

மதுரை, திண்டுக்கல் தொகுதிகளில் போட்டியிடும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டுள்ளனர்

Madurai and Dindigul constituencies cpim candidate announced on loksabha election 2024 smp
Author
First Published Mar 15, 2024, 5:52 PM IST | Last Updated Mar 15, 2024, 5:52 PM IST

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான தேதி நாளை பிற்பகல் 3 மணியளவில் அறிவிக்கப்படவுள்ளது. இந்த தேர்தலை எதிர்கொள்ள அரசியல் கட்சிகள் தயாராகி வருகின்றன. மக்களவைத் தேர்தல் 2024இல் ஹாட்ரிக் வெற்றி பெற்று மூன்றாவது முறையாக ஆட்சியமைக்க பாஜக தயாராகி வருகிறது. பாஜகவை வீழ்த்த எதிர்க்கட்சிகள் இந்தியா எனும் பெயரில் கூட்டணி அமைத்துள்ளன.

தமிழ்நாட்டை பொறுத்தவரை திமுக, அதிமுக, பாஜக என இந்த முறை மும்முனை போட்டி நிலவவுள்ளது. திமுக கூட்டணியில் எந்த பிளவும் இல்லாமல் அப்படியே உள்ளது. அக்கூட்டணியில், காங்கிரஸ், விசிக, மதிமுக, இடதுசாரிகள், மக்கள் நீதி மய்யம், இந்திய யூனியன் முஸ்லிம் லீக், மனிதநேய மக்கள் கட்சி, கொங்கு மக்கள் தேசிய கட்சி உள்ளிட்ட கட்சிகள் உள்ளன.

எதிர்க்கட்சியாக இருந்தபோதே 2019 மக்களவைத் தேர்தலில் தேனியைத் தவிர அனைத்து தொகுதிகளையும் வசமாக்கியது திமுக. எனவே, ஆளுங்கட்சியாக இருப்பதால் இந்த முறை புதுச்சேரி உள்பட 40 தொகுதிகளிலும் வெற்றி பெற முதல்வர் ஸ்டாலின் இலக்கு நிர்ணயித்துள்ளார்.

அந்த வகையில், கூட்டணி கட்சிகளுடன் தொகுதி பங்கீடு குறித்து பேசுவதற்காக பொருளாளர் டி.ஆர்.பாலு எம்.பி. தலைமையில் திமுக குழு அமைத்திருந்தது. இக்குழுவானது, கூட்டணி கட்சிகளுடனான தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தையை அண்மையில் முடித்தது. அதன்படி, கூட்டணியில் அங்கம் வகிக்கும் காங்கிரசுக்கு 10, இந்திய கம்யூனிஸ்டுக்கு 2, மதிமுகவுக்கு 1, கொங்கு நாடு மக்கள் தேசிய கட்சிக்கு 1, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டுக்கு 2, விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கு 2, இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சிக்கு 1 என தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. மீதமுள்ள 21 தொகுதிகளில் தி.மு.க. போட்டியிடுகிறது.

இதில், மதுரை, திண்டுக்கல் ஆகிய இரண்டு தொகுதிகளில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியும், நாகை, திருப்பூர் ஆகிய தொகுதிகளில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியும் போட்டியிடுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. கடந்த தேர்தலில் கோவை, மதுரையில் போட்டியிட்ட நிலையில் தற்போது கோவைக்கு பதில் திண்டுக்கல்லில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி போட்டியிடுகிறது.

ரெய்டுகளுக்கு பின்னர் தேர்தல் பத்திரங்கள் மூலம் நன்கொடை அளித்த நிறுவனங்கள்!

இந்த நிலையில், மக்களவைத் தேர்தல் 2024இல் திமுக கூட்டணியில் போட்டியிடும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு ஒதுக்கப்பட்டுள்ள மதுரை, திண்டுக்கல் தொகுதிகளுக்கான வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டுள்ளனர். இந்த அறிவிப்பை அக்கட்சியின் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் வெளியிட்டார்.

அதன்படி, மதுரை மக்களவைத் தொகுதி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளராக சு.வெங்கடேசன் மீண்டும் போட்டியிடுகிறார். திண்டுக்கல் தொகுதியில் சச்சிதானந்தம் போட்டியிடவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios