மதுரையில் அமைய உள்ள எய்ம்ஸ் மருத்துவமனைக்கு அரசியல் தலைவர்களின் பெயர் சூட்டப்படுவதற்கு வாய்ப்பில்லை எனத் தமிழக சுகாதாரத்துறைச் செயலர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். 

மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் புதிதாகக் கட்டப்பட்டுள்ள பன்நோக்குப் பிரிவை தமிழக சுகாதாரத் துறைச் செயலர் ராதாகிருஷ்ணன், கலெக்டர் நடராஜன் ஆகியோர் பார்வையிட்டு ஆய்வு செய்தனர். 

பின்னர் சுகாதாரத் துறைச் செயலர் ராதாகிருஷ்ணன், செய்தியாளர்களிடம் கூறியதாவது;- மதுரையில் 16 லட்சம் சதுர அடி பரப்பளவில் எய்ம்ஸ் மருத்துவமனை கட்டப்பட இருக்கிறது. இந்த மருத்துவமனையில் எம்பிபிஎஸ் படிப்புக்கான 100 இடங்களும், செவிலியர் படிப்புக்கான 60 இடங்களும் வர உள்ளது. எய்ம்ஸ் மருத்துவமனையில் டெங்கு, பன்றிக் காய்ச்சலுக்கான ஆராய்ச்சி மையமும் செயல்பட உள்ளது. மதுரை எய்ம்ஸ் மருத்துவமனைக்கு அரசியல் தலைவர்களின் பெயர் சூட்டுவதற்கு வாய்ப்பே இல்லை என்றார்.