செந்தில் பாலாஜிக்கு மேலும் ஒரு சிக்கல்.. காவலை நீட்டித்த முதன்மை நீதிமன்றம்..!
செந்தில் பாலாஜி நீதிமன்ற காவலை வருகிற 26 ஆம் தேதி வரை நீட்டித்து சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது

சட்டவிரோத பணப் பரிவர்த்தனை வழக்கில் கைது செய்யப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் அமைச்சர் செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவல் நீட்டிக்கப்பட்டுள்ளது. இன்றுடன் காவல் முடிவடைந்த நிலையில் காவலை நீட்டித்து சென்னை முதன்மை அமர்வு நீதிமன்ற நீதிபதி அல்லி உத்தரவிட்டுள்ளார். அதன்படி, செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவல் ஜூலை 26 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு இரண்டாவது முறையாக நீதிமன்ற காவல் நீட்டிக்கப்படுகிறது.
சட்டவிரோத பரிவர்த்தனை வழக்கில் வழக்கில் அமைச்சர் செந்தில் பாலாஜியை அமலாக்கத் துறை அதிகாரிகள் கடந்த ஜூன் மாதம் 14ஆம் தேதி கைது செய்தனர். அப்போது அவருக்கு நெஞ்சுவலி ஏற்பட்டதால், சென்னை ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அவர் அனுமதிக்கப்பட்டார். அவரை மருத்துவமனைக்கு சென்று பார்வையிட்ட சென்னை முதன்மை அமர்வு நீதிபதி அல்லி, செந்தில் பாலாஜியை ஜூன் 28ஆம் தேதி வரை நீதிமன்றக் காவலில் சிறையில் அடைக்க உத்தரவிட்டார்.
அதன்பிறகு, சென்னை உயர் நீதிமன்றத்தில் நடைபெற்று வரும் செந்தில் பாலாஜி ஆட்கொணர்வு மனு மீது இடைக்கால உத்தரவு பிறப்பித்த நீதிமன்றம், அவரை காவேரி மருத்துவமனைக்கு மாற்ற உத்தரவிட்டது. அதன்படி, காவேரி மருத்துவமனைக்கு மாற்றப்பட்ட அவருக்கு அங்கு அறுவை சிகிச்சை முடிந்து, மருத்துவர்களின் கண்காணிப்பில் தற்போது சிகிச்சை பெற்று வருகிறார்.
இதனிடையே, அவரது நீதிமன்ற காவல் முடிந்ததால் ஜூன் 28ஆம் தேதி அவரை அமலாக்கத்துறை அதிகாரிகள் சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். வழக்கை விசாரித்த நீதிமன்றம், அவரது நீதிமன்ற காவலை ஜூலை 12ஆம் தேதி வரை நீட்டித்து உத்தரவிட்டது.
மகளிர் உரிமை தொகைக்கு இது கட்டாயம்.! தமிழ்நாடு அரசு வெளியிட்ட முக்கிய தகவல்.!
அதன்படி, செந்தில் பாலாஜியின் இன்றுடன் காவல் முடிவடைந்த நிலையில், சென்னை முதன்மை நீதிமன்றத்தில் வழக்கு விசாரணைக்காக காவேரி மருத்துவமனையில் இருந்து காணொலி மூலம் செந்தில் பாலாஜி ஆஜர்படுத்தப்பட்டார். வழக்கை விசாரித்த சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம், செந்தில் பாலாஜி நீதிமன்ற காவலை வருகிற 26ஆம் தேதி வரை நீட்டித்து உத்தரவிட்டுள்ளது. இதன் மூலம் இரண்டாவது முறையாக அவரது நீதிமன்ற காவல் நீட்டிக்கப்பட்டுள்ளது.
செந்தில் பாலாஜியின் ஆட்கொணர்வு மனு மீது சென்னை உயர்நீதிமன்றத்தில் விசாரணை நடந்துவரும் நிலையில் காவல் நீட்டிக்கப்பட்டுள்ளது. முன்னதாக, ஆட்கொணர்வு மனு மீது விசாரணை நடத்திய இரு நீதிபதிகள் அமர்வு, மாறுபட்ட தீர்ப்பை வழங்கியது. இதனால், வழக்கு விசாரணை 3ஆவது நீதிபதிக்கு மாற்றப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது.