Madras High Court : தவெக கூட்டத்தில் ஏற்பட்ட உயிரிழப்புகள் தொடர்பான வழக்கில், இது மனிதனால் உருவாக்கப்பட்ட பேரழிவு என சென்னை உயர்நீதிமன்றம் கடுமையாக விமர்சித்துள்ளது. தலைமைத்துவ பண்பு இல்லை என தவெக தலைமையை சாடியது.
Karur TVK meeting tragedy : கரூரில் நடைபெற்ற தவெக கூட்டத்தில் சிக்கி 41 பேர் உயிரிழ்ந்தனர். இந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த சம்பவம் தொடர்பாக தவெக நிர்வாகிகள் மீது போலீஸ் தரப்பும், போலீஸ் தான் காரணம் என தவெக தரப்பும் மாறி மாறி குற்றச்சாட்டுக்களை கூறி வருகிறது. இந்த நிலையில் , அரசியல் கட்சிகளின் ரோட் ஷோ-க்களுக்கு வழிகாட்டு நெறிமுறைகள் வகுக்கக் கோரும், அதுவரை எந்த கட்சிகளுக்கும் ரோட் ஷோ-க்களுக்கு தடை விதிக்க வேண்டும் என்றும் சென்னை வில்லிவாக்கத்தைச் சேர்ந்த பி.ஹெச்.தினேஷ் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்திருந்தார். இந்த வழக்கு விசாரணை இன்று மதியம் சென்னை உயர் நீதிமன்றத்தில் நீதிபதி செந்தில் குமார் முன்னிலையில் நடைபெற்றது.
விஜய்யை சரமாரியாக விமர்சித்த நீதிமன்றம்
தமிழக அரசுத்தரப்பில் ஆஜரான கூடுதல் தலைமை வழக்கறிஞர் ஜெ.ரவீந்திரன், வழிகாட்டு நெறிமுறைகள் வகுக்கும் வரை எந்த கட்சிக்கும் பேரணி செல்ல அனுமதி வழங்கப்படாது என உயர்நீதிமன்ற மதுரை அமர்வில் தெரிவித்ததாகக் குறிப்பிட்டார். மேலும், இந்த சம்பவம் தொடர்பாக பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டு, த.வெ.க. கரூர் மாவட்ட செயலாளர் மதியழகன், நகர செயலாளர் பவுன் ராஜ் ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும், பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த், துணைப்பொதுச் செயலாளர் நிர்மல்குமார் ஆகியோர் மீதும் வழக்குப்பதிவு செய்துள்ளதாகவும், அவர்கள் இருவரும் முன் ஜாமீன் கோரியுள்ளனர். புலன் விசாரணை நடந்து வருகிறது என, காவல் துறை தரப்பில் ஆஜரான தலைமை குற்றவியல் வழக்கறிஞர் அசன் முகமது ஜின்னா விளக்கமளித்தார்.
அப்போது கரூர் சம்பவத்திற்கு நீதிபதி இரங்கலை தெரிவித்தார். இதனையடுத்து நடைபெற்ற வாதத்தின் போது விஜய்யின் வாகனம் இரு சக்கர வாகனத்தின் மீது மோதிய பின்பு பிரச்சார வாகனம் நிற்காமல் சென்றுள்ளது. இது தொடர்பாக ஏதேனும் வழக்கு பதியப்பட்டதா.? வழக்கு பதியாதது ஏன் என கேள்வி எழுப்பப்பட்டது. இதற்கு பதிலளித்த அரசு கூடுதல் தலைமை வழக்கறிஞர், த.வெ.க கேட்ட இடத்தை தான் ஒதுக்கினோம். 11 நிபந்தனைகள் விதிக்கப்பட்டன. இரு நிபந்தனைகள் மட்டும் பூர்த்தி செய்யப்பட்டன. மீதமுள்ள நிபந்தனைகள் மீறப்பட்டன.
கரூர் சம்பவம்- மனிதனால் உருவாக்கப்பட்ட பேரழிவு
டிசம்பர் மாதம் திட்டமிடப்பட்ட நிகழ்ச்சி திடீரென செப்டம்பருக்கு மாற்றப்பட்டுள்ளது என விளக்கம் அளித்தார். கட்டுப்படுத்தப்படாத கலவரம் போல் சம்பவம் நிகழ்ந்துள்ளது. நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்களுக்கு அரசு கருணை காட்டுகிறதா.? என கேள்வி எழுப்பினார். தொடர்ந்து பேசிய நீதிபதி, கரூரில் நடைபெற்றது மனிதனால் உருவாக்கப்பட்ட பேரழிவு (Man made disaster) நிகழ்ந்துள்ளதாக கூறினார். நீதிமன்றம் கண்ணை மூடிக்கொண்டு இருக்க முடியாது. நீதிமன்றம் மௌனமாக வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்காது. மொத்த உலகமே இதற்கு சாட்சி என தெரிவித்தனர். கரூர் கூட்ட நெரிசல் சம்பவம் நடைபெற்ற நிலையில் தவெக நிகழ்ச்சி ஏற்ப்பாட்டாளர்கள், தலைவர் முதல் அனைவரும் சம்பவம் இடத்தில் இருந்து மறைந்து விட்டனர்.
தலைமைத்துவ பண்பே இல்லை
அவர்களுடைய தொண்டர்களை விட்டு விட்டார்கள். பின் தொடர்ந்தவர்களை விட்டு விட்டார்கள். இந்த நிகழ்ச்சியின் தலைவர் மொத்தமாக மறந்து விட்டார். தலைமைத்துவ பண்பே இல்லை கடுமையாக நீதிபதி விமர்சித்தார். இது என்ன மாதிரியான கட்சி, கரூர் துயரத்துக்கு தவெக வருத்தம் கூட தெரிவிக்கவில்லை. இது தலைவரின் மனநிலையை காட்டுகிறது. அரசியல் கட்சிக்கு இருக்க வேண்டிய குறைந்தபட்சி சமூக பொறுப்பைக்கூட தவெக பின்பற்றவில்லை. தெரிவித்த நீதிபதி ஐ.ஜி. அஸ்ரா கார்க் தலைமையில் சிறப்பு புலனாய்வு குழு நியமனம் செய்து உத்தரவிட்டனர். இந்த வழக்கு ஆவணங்களை உடனடியாக ஒப்படைக்க கரூர் போலீசாருக்கு உத்தரவிடப்பட்டது.
