- Home
- Tamil Nadu News
- ஆதவ் அர்ஜூனாவிற்கு ஆப்பு வைத்த நீதிமன்றம்.! சட்ட ரீதியாக நடவடிக்கை எடுக்க உத்தரவு
ஆதவ் அர்ஜூனாவிற்கு ஆப்பு வைத்த நீதிமன்றம்.! சட்ட ரீதியாக நடவடிக்கை எடுக்க உத்தரவு
தவெக நிர்வாகி ஆதவ் அர்ஜூனா இளைஞர் புரட்சி குறித்து சமூக வலைதளத்தில் பதிவிட்டது சர்ச்சையை ஏற்படுத்தியது. இந்த பதிவு குறித்து விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம், இது போன்ற பொறுப்பற்ற பதிவுகளுக்கு எதிராக சட்டப்பூர்வ நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டுள்ளது.

தவெக சார்பில் கரூரில் நடைபெற்ற பிரச்சார கூட்டத்தில் ஏற்பட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்தனர். இந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில், இந்த சம்பவத்தை திசை திருப்பும் வகையில் சமூக வலைதளங்களில் பொய் செய்தி பரப்பியவர்களை போலீசார் அடுத்தடுத்து கைது செய்தனர். இதற்கு எதிர்ப்பு தெரிவித்த தவெக நிர்வாகி ஆதவ் அர்ஜூனா,
சமூக வலைதளத்தில் பகிர்ந்த தகவல் சர்ச்சையை ஏற்படுத்தியது. அவர் வெளியிட்டப் பதிவில், “சாலையில் நடந்து சென்றாலே தடியடி.. சமூக வலைதளங்களில் கருத்து பதிவிட்டாலே கைது.. இப்படி ஆளும் வர்க்கத்தின் அவருடிகளாக காவல்துறை மாறி போனால் மீட்சிக்கு இளைஞர்களின் புரட்சி தான் ஒரே வழி.
எப்படி இலங்கையிலும், நேபாளத்திலும் இளைஞர்களும், genz தலைமுறையும் ஒன்றாய் கூடி அதிகாரத்திற்கு எதிரான புரட்சியை உருவாக்கிக் காட்டினார்களோ அதே போல இங்கும் இளைஞர்களின் எழுச்சி நிகழும். அந்த எழுச்சி தான் ஆட்சி மாற்றத்திற்கான அடித்தளமாகவும் அரச பயங்கரவாதத்திற்கான முடிவுரையாகவும் இருக்கப்போகிறது. பேய் அரசாண்டால் பிணந்தின்னும் சாஸ்திரங்கள்” என்று குறிப்பிட்டு இருந்தார். இந்த கருத்து இணையத்தில் வைரலான நிலையில் ஆதவ் அர்ஜூனா அந்தப் பதிவை நீக்கினார்.
இந்த நிலையில் இன்று சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு விசாரணை வந்த போது ஆதவ் ஆர்ஜூன் குறித்து ட்விட்டர் பதிவு அரசு தரப்பு வழக்கறிஞர்கள் நீதிபதியிடம் காண்பித்தனர். ஒரு சின்ன வார்த்தை பெரிய பிரச்சனை ஏற்படுத்திவிடும். இவர்கள் சட்டத்திற்கு அப்பாற்பட்டவர்களா? என கேள்வி எழுப்பியவர் நீங்கள் நீதிமன்றத்துக்கு உத்தரவுக்காக காத்திருக்கிறீர்களா என நீதிபதி கேட்டார்.
இதற்கு அரசு தரப்பில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது என தெரிவிக்கப்பட்டது. அப்போது நீதிபதி ஒரு புரட்சி ஏற்படுத்துவது போல பதிவிட்டுள்ளார். இதற்குப் பின்னால் இருக்கக்கூடிய பின்புலத்தை விசாரித்து நடவடிக்கை எடுங்கள். இதுபோல பொறுப்பற்ற பதிவுகளை காவல்துறை கவனத்துடன் வழக்கு பதிவு செய்ய வேண்டும்.
அனைத்து சட்டபூர்வமான நடவடிக்கைகளை எடுங்கள். நீதிமன்றம் பார்த்துக் கொண்டிருக்கிறது. சம்பந்தப்பட்ட போது தேவையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் நீதிபதி உத்தரவிட்டார்.