madras HC notice to commissioner
சென்னை ஐஐடி வளாகம் முன்பு மாட்டிறைச்சி தடைக்கு எதிராக போராட்டம் நடத்திய மாணவியை தாக்கிய போலீசார் மீது நடவடிக்கை எடுக்காதது ஏன் உயர்நீதிமன்றம் சென்னை காவல் ஆணையருக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
இறைச்சிக்காக மாடுகளை விற்கவோ வாங்கவோ கூடாது சில நாட்களுக்கு முன்பு மத்திய அரசு ஆணை பிறப்பித்தது. இதற்கு இந்தியா முழுவதும் பல்வேறு மாநிலங்களில் எதிர்ப்பு கிளம்பியது.
கேரளா, கர்நாடகா, புதுச்சேரி உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் இந்த சட்டத்தை தங்கள் மாநிலங்களில் இயற்ற முடியாது என நேரடியாகவே தெரிவித்தனர்.

கேரளா மாநிலம் ஒரு படி மேலே சென்று மாட்டிறைச்சி தடைக்கு எதிராக அவசர சட்டம் நிறைவேற்றியது. ஆனால் தமிழகத்தில் மக்களுக்கு பிடிக்காத எந்த ஒரு திட்டத்தையும் அரசு அனுமதிக்காது என்று அமைச்சர்களும் எம்.பிக்களும் கூறினாலும், முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி இதுகுறித்து விரைவில் பதிலளிக்கப்படும் என்றே கூறி வருகிறார்.
இதனால் அதிருப்தி அடைந்த மாணவர்கள் அமைப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர். அதன் ஒரு பகுதியாக சென்னை ஐஐடி வளாகத்தில் மாணவ மாணவிகள் மாட்டிறைச்சி தின்னும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்த விழாவை ஏற்பாடு செய்த மாணவர் சூரஜ் என்பவர் சில மாணவர்களால் கொடூரமாக தாக்கப்பட்டார். இதையடுத்து போராட்டம் வலுவாக வெடித்தது.
இதைதொடர்ந்து மாணவர்களை அப்புறப்படுத்தும் பணியில் போலீசார் ஈடுபட்டனர். அப்போது மாணவ மாணவிகளை குண்டு கட்டாக தூக்கி சென்று வேனில் ஏற்றினர்.

இதில் பெண் போலீஸ் ஒருவர் மாணவி ஒருவரின் கையை பிடித்து உடைப்பது போன்ற காட்சி செய்தி சேனல் ஒன்றில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது.
இதுகுறித்து ஐஐடி மாணவர் ராஜசேகரன் என்பவர் உயர்நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு ஒன்று தாக்கல் செய்தார். இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம் மாணவியின் கையை உடைக்க முயன்ற போலீஸ் மீது என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என கேள்வி எழுப்பியுள்ளது.
மேலும், இதுகுறித்து 2 வாரங்களுக்குள் சென்னை காவல் ஆணையர் விஸ்வநாதன் பதிலளிக்க வேண்டும் என நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
