கீழடி அகழாய்வு அறிக்கையை வெளியிட மத்திய அரசுக்கு உயர் நீதிமன்றம் உத்தரவு!
கீழடியில் மேற்கொண்ட அகழாய்வு அறிக்கையை வெளியிட்ட மத்திய அரசு உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது
தமிழர் நாகரிகத்தின் தொன்மையையும், பெருமையையும் உலகத்திற்கு உணர்த்தவிருக்கும் சிவகங்கை மாவட்டம் மானாமதுரை அருகே கீழடியில் அகழாய்வுப் பணிகள் நடைபெற்று வருகின்றன. கடந்த 2013 ஆம் ஆண்டு முதல் 2016ஆம் ஆண்டு வரை மத்திய அரசு சார்பில் தொல்லியல் ஆய்வாளர் அமர்நாத் ராமகிருஷ்ணன் தலைமையில் அகழாய்வு பணிகள் நடைபெற்றன. இந்த அகழாய்வின் போது 5000-க்கும் மேற்பட்ட பழமை வாய்ந்த பொருட்கள் கிடைத்ததாக கூறப்படுகிறது.
இதனிடையே, அமர்நாத் ராமகிருஷ்ணன் திடீரென பணியிட மாற்றம் செய்யப்பட்டு அவருக்கு பதிலாக, ஸ்ரீராமன் என்பவர் கீழடி தொல்லியல் பொறுப்பாளராக நியமிக்கப்பட்டார். அவர் தலைமையில் நடைபெற்ற 3ஆம் கட்ட அகழாய்வில் குறிப்பிடும்படியான கண்டுபிடிப்புகள் இல்லை என தெரிவிக்கப்பட்டது.
அதேசமயம், கீழடியில் மேற்கொள்ளப்பட்ட முதல் 2 கட்ட அகழாய்வு அறிக்கையை மத்திய அரசிடம் தொல்லியல் அறிஞர் அமர்நாத் ராமகிருஷ்ணன் தாக்கல் செய்தார். 982 பக்கங்கள் கொண்ட அந்த அறிக்கை இன்னும் வெளியிடப்படவில்லை. ஆனால், அதற்கு பின்னர் 4 முதல் 9ஆம் கட்ட அகழாய்வு பணிகளை மாநில அரசு மேற்கொண்டு அதுதொடர்பான அறிக்கைகளை வெளியிட்டுள்ளது.
அதிமுக சார்பில் போட்டியிட தனபால் மகன் விருப்பமனு: நீலகிரி தொகுதியில் வெற்றி வாய்ப்பு எப்படி?
இந்த நிலையில், அமர்நாத் ராமகிருஷ்ணன் தாக்கல் செய்த முதல் இரண்டு கட்ட அறிக்கைகளை வெளியிட மத்திய அரசுக்கு உத்தரவிட கோரி, மதுரையை சேர்ந்த பிரபாகர் பாண்டியன், உயர் நீதிமன்ற மதுரை கிளையில் மனுத்தாக்கல் செய்தார். அதில், “அமர்நாத் ராமகிருஷ்ணன் தாக்கல் செய்த முதல் இரண்டு கட்ட அறிக்கையில், கீழடியில் நிலவிய கலாச்சாரம், விவசாயம் செய்த பயிர்கள், விலங்குகள், நகர நாகரீகத்தை நோக்கி நகர்ந்த தன்மை குறித்து விரிவாக தெரிவித்துள்ளார். கீழடியில் கிடைத்த பொருட்களை ரேடியோ கார்பன் எனும் பகுப்பாய்வு முறையில் ஆய்வு செய்ததில் அந்த பொருட்கள் கிட்டத்தட்ட 2600 ஆண்டுகளுக்கு முந்தையது எனத் தெரியவந்துள்ளது. அந்த அறிக்கையை மத்திய அரசு வெளியிட்டால் மட்டுமே கீழடி தொடர்பான தெளிவான வரலாற்று முடிவுகள் கிடைக்கும். எனவே, முதல் 2 கட்ட அகழாய்வு அறிக்கைகைகளை வெளியிட உத்தரவிட வேண்டும்.” என கோரப்பட்டிருந்தது.
இந்த வழக்கு கடந்த முறை விசாரணைக்கு வந்தபோது, மத்திய அரசு பதிலளிக்க உத்தரவிடப்பட்டது. அதன்படி, இந்த வழக்கானது இன்றைய தினம் மீண்டும் விசாரணைக்கு வந்தபோது, அறிக்கைகளை தயாரிக்கும் பணிகள் நடந்து வருவதாகவும், 9 மாதங்களுக்கு அவை வெளியிடப்படும் எனவும் மத்திய அரசு பதிலளித்தது.
இதனை பதிவு செய்து கொண்ட நீதிமன்றம், 2013 முதல் 2016 வரை கீழடியில் நடத்தப்பட்ட முதல் 2 அகழாய்வு குறித்து தொல்லியல் ஆய்வாளர் அமர்நாத் ராமகிருஷ்ணன் அறிக்கையை 9 மாதங்களில் வெளியிட வேண்டும் என மத்திய அரசுக்கு உத்தரவிட்டுள்ளது.