வாலாஜாவில் கிணற்றில் குதித்து காதல் ஜோடி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

வேலூர் மாவட்டம் வாலாஜா சென்னை- பெங்களூரு தேசிய நெடுஞ் சாலையையொட்டி உள்ள தென்கடப்பந்தாங்கல் கிராமத்தில் சதீஷ் என்பவரின் விவசாய கிணற்றில் இன்று காலை துர்நாற்றம் வீசியதால் சந்தேகமடைந்த அப்பகுதி மக்கள், கிணற்றை பார்த்தனர்.

அப்போது, ஒரு இளம்பெண் மற்றும் ஒரு வாலிபரின் பிணங்கள் மிதந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். உடனடியாக, வாலாஜா போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். போலீசார், தீயணைப்புத் துறையினர் விரைந்து வந்து கிணற்றில் மிதந்த வாலிபர், இளம்பெண் உடல்களை மீட்டு மேலே கொண்டு வந்து பிரேதப் பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளது.

இதனையடுத்து வழக்கு பதிவு செய்த போலீசார் நடத்திய விசாரணையில், ராணிப்பேட்டை அடுத்த புளியங்கண்ணு மாந்தோப்பு தெருவை சேர்ந்த செல்வராஜ் மகன் சுகுமாறன் மற்றும் வேலூர் அடுத்த ஊசூர் சின்னசேக்கனூரை சேர்ந்த வேலுமணி மகள் எழிலரசி என்பதும் தெரியவந்தது.

சுகுமாறன் காட்பாடியில் உள்ள பைக் விற்பனை ஷோரூமில் வேலை செய்து வந்தார். இருவரும் காதல் ஜோடி எனவும், காதலுக்கு எதிர்ப்பு இருந்திருக்கலாம். இதனால் தற்கொலை முடிவை நாடி இருக்கலாம் என போலீஸ் சந்தேகப்படுகின்றனர்.

கிணற்றின் அருகே காதல் ஜோடி வந்த பைக் இருந்தது. அதன் அருகில், வாலிபரின் பர்ஸ், இளம்பெண்ணின் கைப்பையும் கண்டெடுக்கப்பட்டது. மேலும், இதுதொடர்பாக போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.