விழுப்புரம்,

விழுப்புரத்தில், பெற்றோர் எதிரிப்பு தெரிவித்ததால், காதல் திருமணம் செய்து கொண்ட மகளை செல்போனில் பெற்றோர் மிரட்டியதால் காவல் நிலையத்தில் பாதுகாப்பு கேட்டு தஞ்சம் அடைந்தனர்.

விழுப்புரம் மாவட்டம், சங்கராபுரம் தாலுகாவில் இருக்கிறது சோமண்டார்குடி கிராமம். இந்தக் கிராமத்தைச் சேர்ந்த ராமுவின் மகள் சௌந்தர்யா (19). இவர் கள்ளக்குறிச்சி பகுதியில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் பி.எஸ்.சி. இரண்டாம் ஆண்டு படித்து வருகிறார்.

இவரும், அதே கிராமத்தைச் சேர்ந்த பட்டதாரி இளைஞரான தனசேகர் (29) என்பவரும் இரண்டு ஆண்டுகளாக காதலித்து வந்தனர். இவர்களின் காதல், இருவரின் பெற்றோருக்கும் தெரிந்தது. அவர்கள் இந்த காதலுக்கு கடுமையான எதிர்ப்பைத் தெரிவித்தனர்.

பெற்றொர் சம்மதம் தெரிவிப்பர் என்று நினைத்திருந்த இருவரும் பெற்றொர் எதிர்ப்பு தெரிவிக்கவே, நேற்று காலை வீட்டை விட்டு வெளியேறினர்.

பின்னர், கள்ளக்குறிச்சியில் உள்ள ஒரு கோவிலில் இருவரும் திருமணம் செய்து கொண்டனர்.

இதனை அறிந்த சௌந்தர்யாவின் உறவினர்கள் தனசேகரை செல்போனில் தொடர்பு கொண்டு மிரட்டி உள்ளனர்.

நேற்று மதியம், சௌந்தர்யாவும், தனசேகரும் திருமண கோலத்தில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்திற்கு சென்று நடந்தைத் தெரிவித்து தஞ்சம் அடைந்தனர்.

மேலும், தங்களுக்கு உரிய பாதுகாப்பு வழங்கக்கோரி அங்கிருந்த காவல் அதிகாரிகளிடம் மனு கொடுத்தனர்.

அந்த மனுவைப் பெற்றுக் கொண்ட காவல் அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்கிறோம் என்று உறுதியளித்தனர்.