விருதுநகர் அருகே காதல் விவகாரத்தில் மகளை கழுத்தை நெரித்து கொலை செய்துவிட்டு தாய் தற்கொலை செய்துக்கொண்டது தற்போது அம்பலமாகியுள்ளது. 

விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை அருகே உள்ள மல்லாங்கிணறு பகுதியை சேர்ந்தவர் ராஜாக்கனி. கூலித்தொழிலாளி. அவருடைய மனைவி ஜென்சிமேரி (வயது 37). இவர்களுக்கு 4 மகள்கள். இந்த தம்பதியின் மூத்த மகள் அபிநயா (17). பிளஸ்-2 படித்து வந்தார். அபிநயா அதே பகுதியைச் சேர்ந்த ஒரு வாலிபருடன் பழகி வந்ததாக கூறப்படுகிறது. இது நாளடைவில் காதலாக மாறியது. 

இதை அறிந்த அவரது தாய் அபிநயாவை கடுமையாக கண்டித்துள்ளார். ஆனால் தாயின் பேச்சை கேட்காமல் அந்த வாலிபருடன் பழகி வந்துள்ளார். இந்நிலையில் ராஜாக்கனி மதுரை சென்றுவிட, மற்ற 3 பெண் குழந்தைகளும் பள்ளிக்கு சென்றுவிட்டனர். ஜென்சிமேரி, அபிநயா மட்டும் வீட்டில் இருந்துள்ளனர். அப்போது ஜென்சிமேரி மகளுக்கு அறிவுரை கூறினார். ஆனால் அவர் தாயின் பேச்சை கேட்கவில்லை. பின்னர் தாய் மகள் இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. 

இதனால் ஆத்திரம் அடைந்த தாய் மகள் அபிநாயாவின் கழுத்தை நெறித்து கொலை செய்துள்ளார். இதில் எதிர்பாராத விதமாக அபிநயா உயிரிழந்தார். இதனால் பதற்றமடைந்த தாய் பயத்தில் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டார் என்ற தகவல் தற்போது வெளியாகியுள்ளது.