நாமக்கல்
 
நாமக்கல்லில் ஓட்டுநர் தூங்கிக் கொண்டே ஓட்டிவந்ததால் லாரி சாலையோர டீ கடைக்குள் புகுந்தது. இதில் கடையில் டீ குடித்து கொண்டிருந்தவர் பரிதாபமாக பலியானார்.

கர்நாடக மாநிலம், பெங்களூருவில் இருந்து டிராக்டர் உதிரி பாகங்களை ஏற்றிக்கொண்டு மதுரைக்கு லாரி ஒன்று சென்றுக் கொண்டிருந்தது. இந்த லாரியை திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூரைச் சேர்ந்த ஓட்டுநர் பாலகிருஷ்ணன் (49) என்பவர் ஓட்டிவந்தார்.

இந்த லாரி நேற்று முன்தினம் இரவு 11 மணியளவில் நாமக்கல் மாவட்டம், வள்ளிபுரம் பைபாஸ் சாலை அருகே வந்தது. அப்போது திடீரென ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த லாரி சாலையோரத்தில் இருந்த பேக்கரியுடன் இணைந்த டீ கடைக்குள் புகுந்தது.

இந்த விபத்தில், கடையில் டீ குடித்துக் கொண்டிருந்த கீரம்பூரைச் சேர்ந்த கண்ணன் (31) சம்பவ இடத்திலேயே பரிதாபமாக பலியானார். மேலும், கடையின் முன்புறம் நிறுத்தப்பட்டிருந்த மோட்டார் சைக்கிள் மற்றும் கடையில் இருந்த பொருட்கள் அனைத்தும் சேதமடைந்தன. கடையின் முன்புற கட்டிடமும் சேதம் அடைந்தது. 

இதனை நேரில் பார்த்த அப்பகுதி பொதுமக்கள் ஓட்டுநரை சரமாரியாக அடித்து உதைத்தனர். பின்னர் இதுகுறித்த தகவலை நல்லிப்பாளையம் காவலாளர்களுக்கு கொடுத்தனர். சம்பவ இடத்துக்கு வந்த காவலாளர்கள் லாரி ஓட்டுநரை காப்பாற்றி அவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர். 

இந்த விபத்து குறித்து கண்ணனின் மனைவி ஷீலா கொடுத்த புகாரின்பேரில் காவலாளர்கள் வழக்குப் பதிந்து ஓட்டுநர் பாலகிருஷ்ணனை கைது செய்தனர். 

காவலாளர்கள் ஓட்டுநரிடம் மேற்கொண்ட முதற்கட்ட விசாரணையில் லாரி ஓட்டுநரின் தூக்கமே விபத்துக்கு காரணம் என்பது தெரியவந்துள்ளது. விசாரணை தொடர்ந்து நடந்து வருகிறது.