சென்னையில் வங்கிகள் மூலம் தங்கள் பணத்தை மாற்றிகொள்ளலாம் என்ற மத்திய அரசின் அறிவிப்பை அடுத்து இன்று வங்கிகள் திறந்திருந்தன.
காலையில் 6 மணிமுதலே மக்கள் வங்கிகள் முன்பு கூடிவிட்டனர். அவர்களை போலீசார் வரிசைப்படுத்தி பணத்தை பெறும் ஏற்பாட்டை செய்தனர். வரிசையில் நிற்பவர்களிடம் அடையாள அட்டை வைத்திருக்கிறார்களா என போலீசார் கேட்டறிந்தனர்.

சென்னை முழுதும் அனைத்து வங்கிகள் முன்பும் கூட்டம் அலைமோதியது. படிவம் பெற்று அதை பூர்த்தி செய்து பணத்தை கொடுத்து புதிய 2000 ரூபாய் தாளை பெறுவதற்கு பொதுமக்களுக்கு சுமார் ஒரு மணி முதல் ஒன்றரை மணி நேரம் ஆனது.
சென்னையில் பல இடங்களில் பணம் வருவதற்கு கால தாமதமானதால் பொதுமக்கள் நீண்ட வரிசையில் காத்திருந்தனர். பல இடங்களில் மதியம் 12 மணிக்கு மேல் தான் பணம் வரும் என அறிவித்தனர்.
வங்கிகளில் 2000 ரூபாய் மாற்றிய பொதுமக்கள் அதை ஆச்சர்யத்துடனும் , மகிழ்ச்சியுடனும் அதை எடுத்து சென்றனர்.
