மக்களவைத் தேர்தல் 2024: பட்டாசு கடைகளை மூட உத்தரவு!
மக்களவைத் தேர்தல் 2024ஐயொட்டி, விருதுநகர் மாவட்டத்தில் பட்டாசு கடைகளை மூட அம்மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்
நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. நாடு முழுவதும் 543 தொகுதிகளுக்கு 7 கட்டங்களாக வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. முதற்கட்டமாக தம்ழிநாடு உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் உள்ள 102 மக்களவை தொகுதிகளுக்கு நாளை மறுநாள் வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது.
இந்த தேர்தலை வெளிப்படைத்தன்மையுடன் பாதுகாப்பான முறையில் நடத்த தேர்தல் ஆணையம் உத்தேசித்துள்ளது. அதற்காக பல்வேறு பணிகளை தேர்தல் ஆணையம் மேற்கொண்டு வருகிறது. தேர்தலையொட்டி, மாநிலம் முழுவதும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. நடாளுமன்ற தேர்தலுக்காக தமிழ்நாட்டில் 68,144 வாக்குச்சாவடி மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. வாக்குப்பதிவு நாளன்று அனைவரும் வாக்களிப்பதை உறுதி செய்ய விடுமுறை அளிக்க உத்தரவிடப்பட்டுள்ளது. பொதுமக்கள் சொந்த ஊர்களுக்கு செல்ல சிறப்பு ரயில்கள், பேருந்துகள் இயக்கப்படவுள்ளன.
தேர்தலையொட்டி, பல்வேறு கட்டுப்பாடுகளையும் தேர்தல் ஆணையம் விதித்துள்ளது. அதன்படி, தேர்தல் பிரசாரம் இன்று மாலையுடன் நிறைவடைந்ததும் வெளியூரை சேர்ந்தவர்கள் அவர்களது சொந்த ஊர்களுக்கு செல்ல உத்தரவிடப்பட்டுள்ளது. வாக்குப்பதிவின் போது எவ்வித சட்ட-ஒழுங்கு பிரச்சினை ஏற்படாத வண்ணம் டாஸ்மாக் மதுபான கடைகளை இன்று முதல் வருகிற 19ஆம் தேதி வரை மூட உத்தரவிடப்பட்டுள்ளது.
பயங்கரவாதிகளை கொல்ல எல்லை தாண்டுவோம்: பிரதமர் மோடி பேச்சுக்கு அமெரிக்கா கருத்து!
இந்த நிலையில், மக்களவைத் தேர்தல் 2024ஐயொட்டி, விருதுநகர் மாவட்டத்தில் பட்டாசு கடைகளை மூட அம்மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார். நாடாளுமன்ற தேர்தலை முன்னிட்டு பாதுகாப்பு காரணங்களுக்காக 17.04.2024 (இன்று) முதல் 20.04.2024 வரையும், 02.06.2024 முதல் 05.06.2024 வரையிலும் விருதுநகர் மாவட்டத்தில் உள்ள அனைத்து பட்டாசு கடைகள் மற்றும் வெடிபொருள் பட்டாசு குடோன்களை மூட மாவட்ட ஆட்சியர் ஜெயசீலன் உத்தரவு பிறப்பித்துள்ளார். இதனை மீறுபவர்கள் மீது சட்டப்படியான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் எனவும் அவர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.