பயங்கரவாதிகளை கொல்ல எல்லை தாண்டுவோம்: பிரதமர் மோடி பேச்சுக்கு அமெரிக்கா கருத்து!
பயங்கரவாதிகளை கொலை செய்ய எல்லை தாண்டுவோம் என்ற பிரதமர் மோடியின் பேச்சுக்கு அமெரிக்கா கருத்து தெரிவித்துள்ளது
பாகிஸ்தான் மண்ணில் இந்தியாவின் பயங்கரவாத எதிர்ப்பு நடவடிக்கைகள் தொடர்பான குற்றச்சாட்டுகள் குறித்து கருத்து தெரிவித்த அமெரிக்க வெளியுறவுத்துறை செய்தி தொடர்பாளர் மேத்யூ மில்லர், இந்தியாவும் பாகிஸ்தானும் பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காண வேண்டும் என வலியுறுத்தினார். அதேசமயம், இந்த விவகாரத்தில் தலையிட விரும்பாத அமெரிக்காவின் நிலைப்பாட்டையும் அவர் எடுத்துரைத்தார்.
பயங்கரவாதிகளை கொல்ல எல்லை தாண்டவும் இந்தியா தயங்காது என பிரதமர் மோடி சமீபத்தில் கூறியது பற்றி கருத்து தெரிவித்த வெளியுறவுத்துறை செய்தி தொடர்பாளர் மேத்யூ மில்லர், “நான் முன்பு கூறியது போல், அமெரிக்கா இந்த விவகாரத்தில் தலையிடப் போவதில்லை. இரு நாடுகளுக்கும் நடுவில் நாங்கள் நுழையப் போவதில்லை. ஆனால் இந்தியா மற்றும் பாகிஸ்தான் ஆகிய இரு நாடுகளும் பிரச்சினைகள் பெரிதாவதை தடுக்க பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காண நாங்கள் ஊக்குவிக்கிறோம்.” என தெரிவித்துள்ளார்.
முன்னதாக, இந்தியா-பாகிஸ்தான் இடையேயான கொலைக் குற்றச்சாட்டுகளில் தலையிட மாட்டோம் என்று அமெரிக்கா ஏற்கனவே கூறியிருந்தது என்பது நினைவுகூரத்தக்கது.
இங்கிலாந்து செய்தித்தாளான தி கார்டியனின் கடந்த 5ஆம் தேதி வெளியிட்ட செய்தியில், பாகிஸ்தானில் இலக்கு நிர்ணயிக்கப்பட்ட பல படுகொலைகளை இந்தியா நடத்தியதாக குற்றம் சாட்டியிருந்தது. ஆனால், அந்த கூற்றுகளை தவறானது என மத்திய அரசு மறுப்பு தெரிவித்திருந்தது. அந்த செய்தி அறிக்கை இந்தியாவுக்கு எதிரான தீங்கிழைக்கும் நோக்கத்திலானது எனவும் இந்தியா தெரிவித்திருந்தது.
இந்த அறிக்கை வெளியான சில நாட்களுக்கு பிறகு, உத்தரகாண்ட் மாநிலம் ரிஷிகேஷில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பேசிய பிரதமர் மோடி, “இன்று, நாட்டில் வலுவான அரசு உள்ளது. வலுவான மோடி அரசின் கீழ், பயங்கரவாதிகள் அவர்கள் வீட்டிற்குள் நுழைந்து கொல்லப்படுகிறார்கள்.” என மார்தட்டினார்.
துபாயில் பெருவெள்ளம்.. ஒரு ஆண்டில் பெய்ய வேண்டிய மழை, ஒரே நாளில் பெய்ததால் அதிர்ச்சி..
நாட்டின் அமைதியை சீர்குலைக்கும் பயங்கரவாதிகளை அரசு சும்மா விடாது என்றும், அவர்கள் பாகிஸ்தானுக்கு திரும்பினாலும் வேட்டையாடப்படுவார்கள் என்றும் பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் அண்மையில் கூறியிருந்தார்.
இந்த பேச்சுகளுக்கு பதிலடி கொடுத்த பாகிஸ்தான், பிராந்தியத்தில் அமைதிக்கான தனது உறுதிப்பாட்டை பாகிஸ்தான் எப்போதும் நிரூபித்து வருகிறது எனவும், இதுபோன்ற ஆத்திரமூட்டும் பேச்சுகள் நீண்ட காலத்திற்கு ஆக்கபூர்வமான வாய்புகளை தடுக்கிறது எனவும் தெரிவித்திருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.