எம்.பி. பதவியில் இருந்து விலகிடலாம் போல இருக்கு....

மூத்த தலைவர் எல்.கே. அத்வானி வேதனை

புதுடெல்லி, டிச. 15-

நாடாளுமன்றத்தின் இரு அவைகளும் குளிர்காலக் கூட்டத்தொடரில் தொடர்ந்து, ஒத்திவைக்கப்பட்டு வருவதை நினைத்து, பாரதிய ஜனதா கட்சியின் மூத்த தலைவர் எல்.கே. அத்வானி, தனது எம்.பி. பதவியை ராஜினாமா செய்துவிடலாம் என நினைப்பதாக வேதனையுடன் தெரிவித்துள்ளார். 

குளிர்காலக் கூட்டத்தொடர்

நாடாளுமன்றத்தின் குளிர்காலக் கூட்டத்தொடர், கடந்த மாதம் 16-ந்தேதி தொடங்கியது. கூட்டம் தொடங்கியதில் இருந்து, ரூபாய் நோட்டு விவகாரம், உரி ராணுவ முகாம் தாக்குதல், உள்ளிட்ட பல விஷயங்கள் குறித்து எதிர்க்கட்சிகள் தொடர்ந்து அமளியில் ஈடுபட்டு வருகின்றனர். 

ஒத்திவைப்பு

இதனால், மாநிலங்கள் அவை, மக்கள் அவை என இரு அவைகளும் ஒரு நாள் கூட முழுமையாக அலுவல்கள் ஏதும் நடத்தப்படாமல் எதிர்க்கட்சிகளின் பிரச்சினையால், முடக்கப்பட்டு வருகின்றன.

எதிர்க்கட்சி எம்.பி.கள் ரூபாய் நோட்டு விவகாரம் தொடர்பாக தொடர்ந்து அமளியில் ஈடுபட்டு வருவதால், நாள்தோறும் அவை ஒத்திவைக்கப்பட்டு வருகிறது. 

வேதனை

கடந்த வாரம் இது தொடர்பாக வேதனையுடன் மூத்த எம்.பி. எல்.கே. அத்வானி, கருத்து தெரிவித்திருந்தார். அப்போது அவர் கூறுகையில், மக்கள் அவை சபாநாயகர் சுமித்ரா மகாஜன், நாடாளுமன்ற விவகாரத்துறை அமைச்சர் ஆனந்தகுமார் ஆகியோர் சபையை நடத்தவிடாமல் செய்கின்றனர். 

 சபாநாயகர் மகாஜன் சபையை முறையாக நடத்துவதில்லை. இதை வெளிப்படையாகக் கூறுகிறேன். இரு தரப்பு எம்.பி.களும் சபையை நடத்த விடுவதில்லை. ஒரு தரப்பினர், வாதம் செய்தால், மற்ற தரப்பினர் சமாதானம்செய்ய வேண்டும். இப்படி நாள்தோறும் ஒத்திவைப்பதற்கு பதிலாக மொத்தமாக ஒத்திவையுங்கள் என்று வேதனையுடன் தெரிவித்து இருந்தார். 

இன்றும் அமளி

இந்நிலையில், நாளையுடன் குளிர்காலக் கூட்டத்தொடர் முடிகிறது. இன்னும் நாடாளுமன்ற பட்டியலில் உள்ள எந்த மசோதாவும் முறையாக நிறைவேற்றப்படவில்லை. இதற்கிடையே இன்று மக்கள் அவை கூடிய 15 நிமிடங்களில், ரூபாய் நோட்டு விவகாரம் தொடர்பாக திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் எம்.பி. இத்ரிஸ் அலி, அரசுக்கு எதிராக கோஷமிட்டு அவையின் நடுப்பகுதிக்கு வந்தார். இதையடுத்து, அவையை நாள் முழுவதும் சபாநாயகர் சுமித்ரா மகாஜன் ஒத்திவைத்தார். 

கண்டனம்

இந்த காட்சியை அமைதியாகப் பார்த்துக்கொண்டு இருந்த மூத்த எம்.பி. அத்வானி, மிகுந்த வேதனை அடைந்தார். அப்போது அங்கு அமர்ந்து இருந்த மத்தியஅமைச்சர்கள் ஸ்மிருதி எராணி, ராஜ்நாத சிங் ஆகியோரை அத்வானி அருகே அழைத்தார். 

குளிர்காலக் கூட்டத்தொடர் முடிய இன்னும் ஒரு நாள் இருக்கும் போது, அனைத்து கட்சிகளையும் அழைத்து ஆலோசனை நடத்தி, இந்த அவையை சமூகமாக நடத்த வழி தேடுங்கள். அவைத்தலைவர் சுமித்ரா மகாஜனிடம் தெரிவியுங்கள் என்று கூறினார். 

மேலும் மூத்த தலைவர் அத்வானி பேசுகையில், 

கடைசி நாளான நாளையும் இதுபோல் விவாதம் ஏதுமின்றி நாடாளுமன்றம் முடக்கப்பட்டால், அது மிகப்பெரிய அவமானம். தவறான செய்தியை மக்களுக்கு இது எடுத்துச் செல்லும். இதற்கு முன் இதுபோல் நடந்தது இல்லை. 

ரூபாய் நோட்டு விவகாரம் தொடர்பாக கட்சிகளுக்கு இடையே மாறுபட்ட கருத்து இருந்தால், அது தொடர்பாக பேச வேண்டும், விவாதம் செய்ய வேண்டும். அப்போது தான் தீர்க்க முடியும். இப்படியே தொடர்ந்தால், யாரும் வெற்றி பெறமுடியாது. நாடாளுமன்றத்துக்கு தான் இழப்பு ஏற்படும். 

இப்போது நடக்கும் சம்பவங்களை முன்னாள் பிரதமர் அடல்பிகாரி வாஜ்பாய் பார்த்தால், மிகவும் வேதனைப்படுவார். இந்த சூழலில் நானே எனது பதவியை ராஜினாமா செய்து விடலாம் என நினைக்கிறேன் என வேதனையுடன் தெரிவித்தார்.