- Home
- Tamil Nadu News
- காது கொடுத்து கேட்பதற்கு கூட தயாராக இல்லாத திமுக அரசு.. முதல்வர் ஸ்டாலினை விளாசிய அன்புமணி
காது கொடுத்து கேட்பதற்கு கூட தயாராக இல்லாத திமுக அரசு.. முதல்வர் ஸ்டாலினை விளாசிய அன்புமணி
சொத்துவரி மூலம் கிடைக்கும் ரூ.1500 கோடி பங்கில் ரூ.150 கோடியை நூலக மேம்பாடு, நூலகர் பணிநிலைப்புக்கு செலவிடக் கூடாதா? கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும் என பாமக தலைவர் அன்புமணி தெரிவித்துள்ளார்.

நூலகங்களின் தரத்தை உயர்த்த வேண்டும்..
பாமக தலைவர் அன்புமணி வெளியிட்டுள்ள சமூக வலைதளப் பதிவில், “தமிழ்நாட்டில் செயல்பட்டு வரும் பொது நூலகங்களை தரம் உயர்த்த வேண்டும்; ஊர்ப்புற நூலகர்களை மூன்றாம் நிலை நூலகர்களாக பதவி உயர்த்த வேண்டும், நூலகர் காலியிடங்களை நிரப்ப வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி ஊர்ப்புற நூலகர்கள் பல ஆண்டுகளாக பல கட்டங்களாக போராட்டங்களை நடத்தி வரும் நிலையில், அவர்களின் கோரிக்கைகளை காது கொடுத்து கேட்பதற்குக் கூட திமுக அரசு தயாராக இல்லாதது கண்டிக்கத்தக்கது.
நூலகர்களுக்கு பதவி உயர்வு
ஊர்ப்புற நூலகர்களின் வாழ்க்கை நிலை மிகவும் மோசமானது. அவர்கள் ரூ.7700 அடிப்படை ஊதியம் என்ற மிகக் குறைந்த சிறப்பு காலமுறை ஊதியத்தில் பணியாற்றி வருகின்றனர். அவர்களில் 446 ஊர்ப்புற நூலகர்களுக்கு ரூ.19,500 என்ற அடிப்படை ஊதியம் கொண்ட மூன்றாம் நிலை நூலகர்களாக பதவி உயர்வு வழங்கப்பட்டுள்ள நிலையில், மீதமுள்ள 1005 ஊர்ப்புற நூலகர்களும் தங்களுக்கும் அதே நிலையில் பதவி உயர்வு வழங்க வேண்டும் என்று வலியுறுத்தி வருகின்றனர். இந்தக் கோரிக்கை மிகவும் நியாயமானதே.
வாக்குறுதி அளித்த திமுக
இந்தக் கோரிக்கையை அங்கீகரித்திருக்கும் திமுக, 2021-ஆம் ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தலின் போது வெளியிட்ட தேர்தல் அறிக்கையில், திமுக ஆட்சிக்கு வந்தால், ’’ஊர்ப்புற நூலகர்களாகக் கிராமங்களில் பணியாற்றும் நூலகர்களுக்குக் கால முறையிலான பணி வழங்கப்படும் (வாக்குறுதி எண் - 178)” என்று வாக்குறுதி அளித்திருந்தது. ஆனால், ஆட்சிக்கு வந்து ஐந்தாண்டுகள் நிறைவடையவுள்ள நிலையில் இந்த வாக்குறுதியையும், பொது நூலகங்கள் தொடர்பான பிற கோரிக்கைகளையும் நிறைவேற்ற திமுக அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.
உள்ளாட்சி அமைப்புகள் வசூலிக்கும் சொத்து வரியில் 10% தொகை நூலக வரியாக வசூலிக்கப்பட்டு நூலகத் துறைக்கு வழங்கப்படுகிறது. இந்த வகையில் மட்டும் நூலகங்களுக்கு ஆண்டுக்கு ரூ.1500 கோடிக்கும் கூடுதலாக வழங்கப்படுகிறது. ஊர்ப்புற நூலகர்களுக்கு பதவி உயர்வு, பொது நூலகங்களை தரம் உயர்த்துதல் உள்ளிட்ட கோரிக்கைகளை நிறைவேற்ற ரூ.150 கோடி போதுமானது. ஆனால், அதை செய்வதற்குக் கூட திமுக அரசுக்கு மனமில்லை.
தரம் உயாத்தப்படாத நூலகங்கள்
நூலகங்கள் தான் அறிவுக்கோயில்கள்.அவை மேம்படுத்தப்பட்டுக் கொண்டே இருக்க வேண்டும். ஆனால், கடந்த 15 ஆண்டுகளுக்கும் மேலாக நூலகங்கள் தரம் உயர்த்தப்படவில்லை. இந்த தேக்க நிலை இனியும் தொடரக்கூடாது. எனவே, ஊர்ப்புற நூலகர்களுக்கு பதவி உயர்வு வழங்க வேண்டும்; நூலகங்களை தரம் உயர்த்த வேண்டும் ; காலியாக இருக்கும் நூலகர் பணியிடங்களை நிரப்ப வேண்டும் என்பன உள்ளிட்ட அனைத்துக் கோரிக்கைகளையும் திமுக அரசு உடனே நிறைவேற்ற வேண்டும்” என்று குறிப்பிட்டுள்ளார்.

