திருவண்ணாமலை அடுத்த வேட்டவலம் அருகே ஜமீன் மண்டபம் கிராமத்தில் பழம்மனோன்மணி அம்மன் ஆலயம் உள்ளது. இந்த கோயிலில், பல கோடி ரூபாய் மதிப்புள்ள மரகத லிங்கம் மற்றும் நகைகள்ளை மர்மநபர்கள் கொள்ளையடித்து சென்றனர்.

திருவண்ணாமலை அடுத்த வேட்டவலம் அருகே ஜமீன் மண்டபம் கிராமத்தில் பழம்மனோன்மணி அம்மன் ஆலயம் உள்ளது. வேட்டவலம் ஜமீன் குடும்பத்தாரின் நிர்வாகத்தில் இக்கோயில் செயல்பட்டு வருகிறது. ஜமீன் குடும்பத்தின் வாரிசாக உள்ள மகேந்திர பண்டாரி என்பவர் கோயிலை நிர்வகித்து வருகிறார்.

நேற்று இரவு கோயிலில் பூஜை முடிந்ததும், பூசாரி வீட்டுக்கு சென்றார். நேற்று காலை அவ்வழியாக கிராம மக்கள் சென்றபோது, பழமை வாய்ந்த இக்கோயிலின் பக்கவாட்டு சுவரில் துளையிடப்பட்டு இருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தனர்.

இதுகுறித்து கோயில் நிர்வாகம் மற்றும் கிராம மக்களுக்கு தகவல் பரவியது. இதையடுத்து அங்கு மக்கள் திரண்டனர். கோயிலை திறந்து உள்ளே சென்று பார்த்தபோது, அங்கு பூஜிக்கப்பட்டு வந்த பச்சை மரகத லிங்கம் கொள்ளையடிக்கப்பட்டுள்ளது.

மேலும் ஐம்பொன்னால் செய்யப்பட்ட நாகபூசனம், கிரீடம், ஒட்டியானம் உள்பட 6 மதிப்புமிக்க பொருட்களை, கோயில் சுவரில் துளைப்போட்டு உள்ளே நுழைந்த மர்மநபர்கள் கொள்ளையடித்து சென்றது தெரிந்தது.

தகவலறிந்து திருவண்ணாமலை எஸ்பி பொன்னி மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று விசாரித்தனர். மேலும்போலீசார் வழக்குப்பதிவு செய்து, மர்மநபர்களை தேடி வருகின்றனர்.

போலீசாரின் முதற்கட்ட விசாரணையில், ஜமீன் குடும்பத்துக்கு நெருக்கமாக உள்ளவர்களுக்கு இந்த கொள்ளை சம்பவத்தில் தொடர்பு இருக்கலாம் என சந்தேகிக்கபடுகிறது. மேலும் கோயில் சிலைகளை வெளிநாடுகளுக்கு கடத்தும் கும்பலை சேர்ந்தவர்கள் கொள்ளையடித்து சென்றுள்ளார்களா என்ற கோணத்திலும் போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

பழமை வாய்ந்த மனோன்மணி அம்மன் கோயிலில் மரகத லிங்கம் மற்றும் நகைகளை மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்றுள்ளது அப்பகுதி மக்களிடையே பெரும் பரபரப்பையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.