Asianet News TamilAsianet News Tamil

நகைத் தகராறில் இளைஞரைக் குத்திக் கொன்ற தந்தை, மகன் உள்பட நால்வருக்கு ஆயுள் தண்டனை – நீதிமன்றம் அதிரடி…

Life sentence for four persons who stabbed youth in jewelery dispute - court action ...
Life sentence for four persons who stabbed youth in jewelery dispute - court action ...
Author
First Published Sep 2, 2017, 7:54 AM IST


இராமநாதபுரம்

இராமநாதபுரத்தில் நகைத் தகராறில் இளைஞரைக் கத்தியால் குத்திக் கொன்ற தந்தை, மகன் உள்பட நால்வருக்கு ஆயுள் தண்டனை விதித்து நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு வழங்கியது.

இராமநாதபுரம் மாவட்டம் ஏர்வாடியைச் சேர்ந்தவர் செய்யது ரகுமத்துல்லா என்பவரின் மகன் அல்தாப் உசேன் (28). இவருக்கு திருமணமாகி இரண்டு குழந்தைகள் உள்ளனர்.

இவர் ஏர்வாடி பகுதியைச் சேர்ந்த அசரப்அலி என்பவரிடம் சமையல் பாத்திரங்களை வாடகைக்கு வாங்கி உள்ளார். பலமுறை வாடகைக்கு பாத்திரங்கள் வாங்கிய வகையில் அல்டாப் உசேன் ரூ.36 ஆயிரம் பாக்கி வைத்துள்ளாராம்.

இதில் குறிப்பிட்ட அளவுத் தொகையை மட்டும் கொடுத்துவிட்டு மீதமுள்ள பணத்திற்கு பதிலாக 7 சவரன் தங்க நகைகளை கொடுத்துள்ளார்.

கடந்த 2014–ஆம் ஆண்டு நவம்பர் 13–ஆம் தேதி அல்டாப் உசேன் வாடகை பாத்திர கடைக்கு சென்று அசரப்அலியிடம், பணம் கொண்டு வந்திருக்கிறேன். நான் கொடுத்த தங்க நகைகளை திருப்பிக் கொடுக்கும்படி கூறியுள்ளார்.

இதனைக் கேட்ட அசரப்அலி உள்ளே சென்று தங்க நகையை எடுத்துக் கொடுத்துள்ளார். அதில், அல்டாப் உசேன் கொடுத்த நகையின் அளவை விட குறைவாக இருந்ததால்  அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டுள்ளது.

அப்போது ஆத்திரமடைந்த அல்டாப்உசேன், அசரப்அலியை தாக்கினார். தனது தந்தை தாக்கப்படுவதைக் கண்ட அசரப்அலியின் மகன் முகமது சலீம் ஓடிவந்து அல்டாப்உசேனை பதிலுக்கு தாக்கியுள்ளார். அவரையும் அல்டாப் உசேன் தாக்கி கீழே தள்ளிவிட்டுவிட்டார்.

இந்தச் சம்பவத்தை அறிந்து அருகில் கடை வைத்துள்ள அசரப்அலியின் தம்பி செய்யது அப்தாகிர், அவருடைய மகன் சகாபுதீன் ஆகியோர் வந்துத் தடுத்துள்ளனர். இதனால் அவர்களுக்குள் கடும் மோதல் முற்றியது.

அப்போது ஆத்திரமடைந்த அசரப்அலி கீழே கிடந்த கத்தியை எடுத்து சரமாரியாக அல்டாப்உசேனை குத்தினார். இதில் இரத்த வெள்ளத்தில் சாய்ந்த அல்டாப்உசேன் சிகிச்சைக்காக கீழக்கரை அரசு மருத்துவமனைக்குக் கொண்டுச் செல்லப்பட்டு அங்கு சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.

இந்தச் சம்பவம் தொடர்பாக ஏர்வாடி காவல் ஆய்வாளர் பால்பாண்டி வழக்குப்பதிந்த்உ அசரப்அலி, அவரின் மகன் முகம்மது சலீம், தம்பி செய்யது அப்தாகிர், தம்பியின் மகன் சகாபுதீன் ஆகிய நால்வரையும் கைது செய்தார்.

இந்த வழக்கு விசாரணை இராமநாதபுரம் கூடுதல் மாவட்ட நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. வழக்கினை விசாரித்த நீதிபதி லிங்கேசுவரன் அல்டாப்உசேனை கொலை செய்த தந்தை, மகன் உள்பட நால்வருக்கும் ஆயுள் தண்டனையும், தலா ரூ.11 ஆயிரம் அபராதமும், அபராதத்தை கட்ட தவறினால் மேலும், 6 மாதம் சிறைத் தண்டனையும் விதித்து தீர்ப்பு அளித்தார்.

இந்த வழக்கில் அரசு தரப்பில் வழக்கறிஞர் வெங்கடேசன் வாதாடினார்.

Follow Us:
Download App:
  • android
  • ios