Life imprisonment for killing mother for stealing jewels - court action

ஈரோடு

சொத்துக்காக தாயை கழுத்தை துணியால் இறுக்கி கொலை செய்துவிட்டு நகைகளை திருடிச் சென்ற மகளுக்கு ஆயுள் தண்டனை விதித்து ஈரோடு மகளிர் நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு வழங்கியது.

ஈரோடு மாவட்டம், அருகே உள்ள நாதகௌண்டம்பாளையம் பகுதியைச் சேர்ந்தவர் பழனிச்சாமி (67). இவருடைய மனைவி கண்ணம்மாள் (58). இவர்களுக்கு சுசீலா (40), சாவித்திரி என இரண்டு மகள்களும், குழந்தைவேல் (37) என்ற மகனும் உள்ளனர். இவர்கள் மூன்று பேருக்கும் திருமணமாகிவிட்டது.

இந்த நிலையில் கடந்த சில வருடங்களுக்கு முன்பு பழனிச்சாமியின் பெயரில் இருந்த ஒரு ஏக்கர் நிலத்தை கண்ணம்மாள் அவருடைய மகன் குழந்தைவேலின் பெயருக்கு மாற்றிக் கொடுத்துள்ளார். இது மூத்த மகள் சுசீலாவுக்கு பிடிக்கவில்லை. அவர் தனக்கும் சொத்தில் பங்கு வேண்டும் என கேட்டு தாய் கண்ணம்மாளிடம் அடிக்கடி சண்டை போட்டு வந்துள்ளார்.

இந்த நிலையில் கடந்த வருடம் ஆகஸ்டு 29-ஆம் தேதியன்று தோட்டத்தில் தனியாக இருந்த கண்ணம்மாளிடம் சுசீலா மீண்டும் தகராறில் ஈடுபட்டார். இதில் கோபமடைந்த சுசீலா, கண்ணம்மாளின் மார்பில் எட்டி உதைத்து கீழே தள்ளி, துணியால் அவரது கழுத்தை இறுக்கி கொலைச் செய்தார். பின்னர் அவருடைய கழுத்தில் கிடந்த ஆறு சவரன் சங்கிலி மற்றும் 1½ சவரன் தோடு, வளையல் ஆகியவற்றைக் திருடிவிட்டு அங்கிருந்து தப்பிச் சென்றுவிட்டார்.

இதுபற்றிய புகாரின்பேரில் ஈரோடு தாலுகா காவலாளர்கள் வழக்கு பதிந்து சுசீலாவை கைது செய்தனர். இது தொடர்பான வழக்கு ஈரோடு மகளிர் நீதிமன்றத்தில் நடந்து வந்தது.

மகளிர் நீதிமன்ற நீதிபதி என்.திருநாவுக்கரசு நேற்று இந்த வழக்கில் தீர்ப்பு வழங்கினார். அந்த தீர்ப்பில், “பெற்றத் தாயை கொலை செய்த குற்றத்திற்காக ஆயுள் தண்டனையும், “நகைகளை கொள்ளையடித்த குற்றத்திற்காக 10 ஆண்டுகளும், தோட்டத்துக்குள் அத்துமீறி நுழைந்த குற்றத்திற்காக மூன்று மாதமும் சிறை தண்டனை விதிக்கப்படுகிறது. மேலும், ரூ.20 ஆயிரத்து 500 அபராதமாக செலுத்த வேண்டும்” என்றும் நீதிபதி உத்தரவிட்டார்.

அபராதத்தை செலுத்த தவறினால் கூடுதலாக நான்கு ஆண்டுகள் சிறை தண்டனை அனுபவிக்க வேண்டும் என கூறிய நீதிபதி என்.திருநாவுக்கரசு இந்த மூன்று தண்டனைகளையும் ஏக காலத்தில் அனுபவிக்கவும் உத்தரவிட்டார்.