ஜல்லிக்கட்டு சட்டத்துக்கு ஆதரவு வழங்கியதற்கு நன்றி… மோடிக்கு ஓபிஎஸ் கடிதம்…

தமிழ்நாட்டில் ஜல்லிக்கட்டு நடக்க ஆதரவு வழங்கிய பிரதமர் நரேந்திர மோடிக்கு நன்றி தெரிவித்து முதலமைச்சர் ஓபிஎஸ் கடிதம் எழுதியுள்ளார்.

இது தொடர்பாக பிரதமர் நரேந்திர மோடிக்கு ஓபிஎஸ் எழுதியுள்ள கடிதத்தில் தமிழகத்தில் ஜல்லிக்கட்டு போட்டியை நடத்துவதற்கு ஏதுவாக, அரசியல்சாசனம் 213-ம் பிரிவில் கூறியுள்ளபடி குடியரசுத் தலைவரின் அறிவுரையைப் பெற்று, தமிழக அரசு அவசர சட்டத்தை கொண்டுவந்தது என குறிப்பிட்டுள்ளார்.

அந்த அவசர சட்டத்துக்கான சட்ட மசோதா ஜனவரி 23-ந் தேதி சட்டசபையில் தாக்கல் செய்யப்பட்டு ஏகமனதாக நிறைவேற்றப்பட்டது.

அந்த மசோதாவுக்கான குடியரசுத் தலைவரின் ஒப்புதலை பெறுவதற்காக தமிழக ஆளுநரால் அந்த மசோதா அனுப்பப்பட்டது. ஜனவரி 31-ந் தேதி இந்த மசோதாவுக்கு குடியரசுத் தலைவரின் ஒப்புதலும் கிடைத்துள்ளது என ஓபிஎஸ் தெரிவித்துள்ளார்.

தமிழகத்தின் கலாசாரம், பாரம்பரியத்தை காப்பாற்றும் வகையில், மீண்டும் தமிழகத்தில் ஜல்லிக்கட்டு நடத்தப்படுவதற்கு அனைத்து உதவிகளையும், ஆதரவையும் வழங்கிய தங்களுக்கு தமிழக அரசின் சார்பிலும், தமிழக மக்கள் சார்பிலும் நன்றி தெரிவித்துக்கொள்வதாக மோடிக்கு ஓபிஎஸ் எழுதிய கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.