Asianet News TamilAsianet News Tamil

போதைப் பொருட்களுக்கு எதிரான நமது குரல் வலுக்கட்டும்: கமல்ஹாசன் சீற்றம்!

போதைப் பொருட்களுக்கு எதிரான நமது குரல் வலுக்கட்டும் என மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்

Lets raise our voice against drugs Kamal Haasan outrage smp
Author
First Published Mar 6, 2024, 2:43 PM IST

புதுச்சேரி முத்தியால் பேட்டையில் சிறுமி மாயமாகி நான்கு நாட்களுக்குப் பிறகு அவரது சடலம் கிடைத்துள்ளது. இந்த வழக்கில் குற்றம் சட்டப்படுபவர்களின் அடையாளம் காணப்பட்டுள்ளது. இவர்கள் சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்ய முயன்றதும், அதில் சிறுமி உயிரிழந்ததும் தெரியவந்துள்ளது. மேலும், குற்றச் சம்பவத்தில் ஈடுபட்டவர்கள் போதைப் பொருள் இச்சம்பவத்தை செய்துள்ளதும் தெரியவந்துள்ளது.

அதேபோல், இந்தியாவிற்கு வந்த வெளிநாட்டுப் பெண் ஜார்கண்ட் மாநிலத்தில் கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டுள்ளார். இதுபோன்ற ஏராளமான குற்றச்சம்பவங்கள் நாடு முழுவதும் அரங்கேறி வருகின்றன.

இந்த நிலையில், போதைப் பொருட்களுக்கு எதிரான நமது குரல் வலுக்கட்டும் என மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார். புதுச்சேரி சிறுமி சம்பவம், ஜார்கண்ட் விவகாரம், போதைப் பொருட்கள் புழக்கம் ஆகியவற்றுக்கு கமல்ஹாசன் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவர் கமல்ஹாசன் தனது எக்ஸ் பக்கத்தில், “புதுச்சேரியில் 8 வயது சிறுமி கடத்திக் கொல்லப்பட்டு சாக்கடையில் வீசப்பட்டிருக்கிறாள். உலகின் பாதி நாடுகளைச் சுற்றிப் பார்த்துவிட்டு இந்தியாவிற்கு வந்த வெளிநாட்டுப் பெண்ணை ராஞ்சியில் ஒரு கும்பல் வன்புணர்வு செய்திருக்கிறது. மங்களூருவில் காதலிக்க மறுத்த பள்ளி மாணவியின் முகத்தில் ஆசிட் வீசப்பட்டுள்ளது. சென்னையில் காதல் திருமணம் செய்துகொண்ட பட்டியலினச் சமூகத்தைச் சேர்ந்த இளைஞன் பெண்ணின் சகோதரனால் கொடூரமாக வெட்டிக் கொல்லப்பட்டுள்ளான். குஜராத், தமிழ்நாடு உள்ளிட்ட மாநிலங்களில் பல கோடி மதிப்பிலான போதைப் பொருட்கள் தொடர்ந்து பறிமுதல் செய்யப்பட்டு வருகின்றன. 

 

 

ஒரு சமூகமாக நாம் எங்கே சென்று கொண்டிருக்கிறோம் எனும் ஆழமான ஐயத்தை இந்தச் சம்பவங்கள் ஏற்படுத்துகின்றன. ஒருபுறம் வளர்ச்சி, வல்லரசு, நல்லாட்சி என்று பெருமை பேசிக்கொண்டிருக்கிறோம். மறுபுறம் பெண்களுக்குப் பாதுகாப்பற்ற, போதையின் பிடியில் சீரழிகிற, சாதி மத வெறி பிடித்தாட்டுகிற சமூகமாக மாறிக்கொண்டிருக்கிறோம். மானுட நேயத்தைத் தொலைத்துவிட்டு மிருக நிலைக்குத் திரும்புவதை வளர்ச்சி என்று கருத முடியுமா? 

மக்களவை தேர்தல் 2024: விரலில் வைக்கப்படும் அழியாத மை எங்கு தயாராகிறது?

குற்றங்கள் எதுவாயினும், அதன் காரணிகள் எவையாக இருந்தாலும் எல்லாவற்றுக்குப் பின்னாலும் இருப்பது மனிதத்தன்மையை மரத்துப்போகச் செய்யும் போதைவஸ்துகள்தான். போதை வஸ்துகள் சகஜமாகப் புழங்கும் தேசத்தில் பெண்களும் குழந்தைகளும் பாதுகாப்பாக வாழவே முடியாது என்பது நிதர்சனம். இந்தச் சீரழிவை இரும்புக் கரம் கொண்டு ஒடுக்காவிடில் எதிர்காலம் நம்மை மன்னிக்காது. 

போதைப் பொருட்களுக்கு எதிரான நமது குரல் வலுக்கட்டும். சமூகத்தைச் சீரழிக்கும் போதைக் கும்பலுக்கு எதிராக நம் எல்லோரது கரங்களும் இணையட்டும். போதையில்லா தேசத்திற்குப் பாதை போட ஒவ்வொருவரும் களமிறங்குவோம்.” என பதிவிட்டுள்ளார்.

Follow Us:
Download App:
  • android
  • ios