திருச்சி

முடிந்தால் என்னை மாவட்டச் செயலாளர் பதவியில் இருந்து டி.டி.வி.தினகரன் நீக்கி பார்க்கட்டும் என்று அமைச்சர் வெல்லமண்டி நடராஜன் சவால் விட்டுள்ளார்.

திருச்சி மாவட்டம், முசிறியில் அமைச்சர் வெல்லமண்டி நடராஜன் செய்தியாளர்களுக்கு நேற்று பேட்டிக் கொடுத்தார்.

அதில், “கட்சியில் இருந்து நீக்கப்பட்ட தினகரன் எப்படி கட்சியில் இணைந்தார். ஜெயலலிதாவின் ஆவி அவரை சும்மா விடாது. ஜெயலலிதாவின் பெயரை சொல்வதற்கு கூட அவருக்கு அருகதை கிடையாது. எடப்பாடி பழனிசாமியை மாவட்டச் செயலாளர் பதவியில் இருந்து நீக்க அவருக்கு அதிகாரம் இல்லை.

ஆர்.கே.நகர் தொகுதி இடைத்தேர்தலில் சசிகலா படத்தை வைக்க முடியவில்லை. சசிகலா படத்தைப் போட்டால் மக்கள் மன்றம் புறக்கணித்துவிடும் என தெரிந்துகொண்டு வேண்டுமென்றே சசிகலா படத்தை புறக்கணித்தவர் டி.டி.வி. தினகரன்.

ஆனால், இன்று பதவி ஆசைக்காக சசிகலா பெயரை தவறாக பயன்படுத்துகிறார். கண்டிப்பாக ஜெயலலிதாவின் ஆன்மா அவரை மன்னிக்காது.

சட்டசபையில் நம்பிக்கையில்லா தீர்மானம் மட்டும் அல்ல எதையும் எதிர்கொள்வார் எடப்பாடி பழனிசாமி.

முடிந்தால் என்னை மாவட்டச் செயலாளர் பதவியில் இருந்து டி.டி.வி.தினகரன் நீக்கி பார்க்கட்டும்.

தினகரன் செல்லாத நோட்டு. பதவியில் இல்லாதவர்கள் யாரை வேண்டுமானாலும் நீக்கலாம், ஏன் பிரதமரைக் கூட அவர் நீக்கலாம்” என்று அமைச்சர் வெல்லமண்டி நடராஜன் கூறினார்.