தமிழகம் முழுவதும்  ஆடிப்பெருக்கு விழாவை பக்தர்கள் உற்சாகமாக கொண்டாடி வருகின்றனர். அதே நேரத்தில் காவிரி ஆற்றில் திறந்துவிடப்பட்ட தண்ணீர் மிகக் குறைந்த அளவே உள்ளதாக பக்தர்கள் புகார் தெரிவித்துள்ளனர்.

ஆடிப் பெருக்கு இன்று முழு உற்சாகத்துடனும் கோலாகலமாகவும் கொண்டாடப்படுகிறது. காவிரியில் ஏராளமானோர் நீராடி சிறப்பு வழிபாடு நடத்தினர். புதுமண தம்பதிகள் காவிரிக்கு வந்து படையலிட்டு தாலிப்பெருக்கு சடங்குகளை நடத்தினர். 

இதே போல் காவிரித் தாய் தடம் பதிக்கும் ஒகேனக்கல்லில் தொடங்கி மேட்டூர், பவானி கூடுதுறை, முசிறி, முக்கொம்பு, ஸ்ரீரங்கம், அம்மா மண்டபம், திருச்சி, கல்லணை, தஞ்சை, திருவையாறு, கும்பகோணம், மயிலாடுதுறை மற்றும் காவிரி கடலில் கலக்கும் பூம்புகார் வரையில் ஆடிப் பெருக்கு உற்சாகமாக கொண்டாடப்படுகிறது.

ஈரோடு மாவட்டம் பவானியில் பவானி, காவிரி, அமுதநதி சங்கமிக்கும் கூடுதுறையில் ஏராளமானோர் புனிதநீராடி சங்கமேஸ்வரர் கோயிலில் வழிபட்டனர்.

ராமேஸ்வரம் அக்னி தீர்த்த கடல் மற்றும் திருச்செந்தூரிலும் ஏராளமானோர் புனிதநீராடி சிறப்பு வழிபாடு நடத்தினர். 

கிருஷ்ணகிரி- போச்சம்பள்ளி தென்பெண்ணை ஆறு, தேனி-சுருளி அருவி, திருச்சி  உள்ளிட்ட பல்வேறு இடங்களில் மக்கள் புனித நீராடி வருகின்றனர்.

ஆனால் இந்த ஆண்டு காவிரி, வைகை தாமிரபரணி உள்ளிட்ட அனைத்து ஆறுகளிலும் தண்ணீர் இல்லாததால் ஆடிப் பெருக்கு விழா களையிழந்து காணப்படுகிறது.