தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சீர்கெட்டுள்ளதாகவும், காவல் நிலையங்கள் மீது பெட்ரோல் குண்டு வீச்சு, பெண் காவல் அதிகாரிக்கு கொலை மிரட்டல் போன்ற சம்பவங்கள் அதிகரித்து வருவதாகவும் எச்.ராஜா விமர்சித்துள்ளார்.

தமிழகத்தில் சட்டம் ஒழுங்கை பாதுகாக்க தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள் தன் இரும்புக் கரங்களை பயன்படுத்தலாம் என்று நினைத்தால் அது எங்கே இருக்கிறது என்று அவரே தேட வேண்டிய நிலை இருக்கிறது என எச்.ராஜா கடுமையாக விமர்சித்து அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில் இராணிப்பேட்டை மாவட்டம் சிப்காட் தொழிற்பேட்டை பகுதியில் உள்ள காவல்நிலையத்தின் மீது இன்று காலை முகமூடி அணிந்த அடையாளம் தெரியாத மர்ம நபர்கள் பெட்ரோல் குண்டு வீசினார்கள் என்கிற செய்தி மிகவும் அதிர்ச்சி அளிக்கிறது. ஒரு பக்கம் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் பல்வேறு பகுதிகளில் தேசிய புலனாய்வு முகமை பயங்கரவாத இயக்கங்களோடு தொடர்புடைய நபர்களை தேடிக்கண்டுபிடித்து கைது செய்து வருகிறது. மறுபக்கம் தமிழகத்தில் பரவலாக நாள்தோறும் படுகொலைகள் நிகழ்ந்த வண்ணம் இருப்பதும் காவல் நிலையத்தின் மீது பெட்ரோல் குண்டு வீசப்பட்ட சம்பவமும் நடந்தேறி இருக்கிறது. 

இந்த அதிர்ச்சியோடு சேர்ந்து தமிழகத்தின் பெண் ADGPயான கல்பனா நாயக் அவர்கள் தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வாணையத்தின் முறைகேடுகளை சுட்டிக்காட்டியதற்காக தன்னை கொலை செய்ய முயற்சி மேற்கொள்ளப்பட்டதாகவும் அது குறித்து தீவிர விசாரணை நடத்தி குற்றவாளிகள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரியும் தமிழக காவல்துறை இயக்குனர் சங்கர் ஜிவால் அவர்களிடம் புகார் அளித்திருப்பதும் மேலும் அதிர்ச்சி அளிக்கிறது. 

தமிழக காவல்துறை நிர்வாகத்தை தனது நேரடி கண்காணிப்பின் கீழ் வழிநடத்தி வரும் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள் இதற்கு என்ன பதில் சொல்லப் போகிறார் எனத் தெரியவில்லை. திமுக ஆட்சியில் தமிழகத்தில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை என்கிற நிலை மாறி காவல்துறையை சேர்ந்த பெண் உயர் அதிகாரியின் உயிருக்கே பாதுகாப்பு இல்லை என்கிற நிலை உருவாகி தற்போது இருக்கிறது. திமுக ஆட்சியில் சட்டம் ஒழுங்கு சரியில்லை. தமிழகத்தில் மக்களின் பாதுகாப்பிற்கு உத்தரவாதம் இல்லை என்கிற நிலை மாறி காவல்துறை அதிகாரிகளின் உயிருக்கும் காவல் நிலையங்களுக்கும் பாதுகாப்பு இல்லை என்கிற நிலை தற்போது உருவாகி இருக்கிறது. 

தமிழகத்தில் சட்டம் ஒழுங்கை பாதுகாக்க தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள் தன் இரும்புக் கரங்களை பயன்படுத்தலாம் என்று நினைத்தால் அது எங்கே இருக்கிறது என்று அவரே தேட வேண்டிய நிலை இருக்கிறது. இதுநாள் வரை அவர் தனது இரும்புக் கரத்தை பயன்படுத்தாமல் இருப்பதற்குக் காரணம் ஒருவேளை அது காணாமல் போயிருக்குமோ என்கிற சந்தேகம் எழுகிறது. அதற்கும் வாய்ப்பிருப்பதாகவே சந்தேகம் எழுகிறது. ஏனெனில் கொரோனா ஊரடங்கு காலத்தில் ஒரு கடை வாசலில் இருந்த கடப்பா கல்லை களவாடி எடைக்கு விற்றவர்கள் ஆயிற்றே திராவிட உடான்ஸ் பிறப்புகள்..!! கடப்பா கல்லையே தூக்கியவர்கள் இரும்புக்கரத்தை மட்டும் விட்டு வைத்திருப்பார்களா என்ன? அந்த இரும்புக்கரம் எந்த காயலான் கடையில் துருப்பிடித்துக் கிடக்கிறதோ? என எச்.ராஜா கடுமையாக விமர்சனம் செய்துள்ளார்.