தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சிறப்பாக உள்ளதால் முதலீடுகள் அதிகம் வருகின்றன - அமைச்சர் பெருமிதம்
தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கு சிறப்பாக இருக்கும் காரணத்தால் அதிக அளவில் வெளிநாட்டு முதலிடுகள் வருவதாக மாநில பொதுப்பணித்துறை மற்றும் நெடுஞ்சாலை துறை அமைச்சர் எ.வ.வேலு தெரிவித்துள்ளார்.
திருவண்ணாமலை மாவட்டத்தில் திருவண்ணாமலை, கீழ்பென்னாத்தூர், கலசப்பாக்கம் செங்கம், வந்தவாசி, போளூர் ஆகிய சட்டமன்ற தொகுதிகளில் சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு திட்டத்தின் மூலம் தலா ரூ.10 லட்சம் வீதம் ரூ.60 லட்சம் செலவில் சட்டமன்ற தொகுதிகளில் உள்ள 100 முக்கிய இடங்களில் 300 கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டு அதன் திறப்பு விழா நேற்று மாலை திருவண்ணாமலையில் நடைபெற்றது.
இவ்விழாவில் மாநில பொதுப்பணித்துறை மற்றும் நெடுஞ்சாலை துறை அமைச்சர் எ.வ.வேலு கலந்துகொண்டு கண்காணிப்பு கேமராக்களை திறந்து வைத்தார்.
அப்போது பேசிய அவர், திருவண்ணாமலை ஆன்மீக நகரமாக உள்ளதால் ஆந்திரா, கர்நாடகா போன்ற மாநிலங்களில் இருந்தும், வெளிநாடுகளில் இருந்தும் பக்தர்களும், சுற்றுலா பயணிகளும் அதிக அளவில் வருவதால் அவர்களின் பாதுகாப்பிற்காகவும், உள்ளூர்வாசிகளின் பாதுகாப்பை மேம்படுத்தவும், போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்தவும், கொலை, கொள்ளை சம்பவங்களை கண்டறியவும் இந்த கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன.
உலக அளவில் கண்காணிப்பு கேமராக்களில் இந்தியாவின் தலைநகர் டெல்லி முதலிடத்திலும், இங்கிலாந்து தலைநகர் லண்டன் இரண்டாவது இடத்திலும், சென்னை தலைநகர் மூன்றாவது இடத்திலும் உள்ளது. சட்டம் ஒழுங்கு சிறப்பாக இருந்தால் தான் தொழில் வளர்ச்சி ஏற்பட்டு பொருளாதாரம் வளர்ச்சி அடையும். அந்த வகையில் தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கு சிறப்பாக இருப்பதால் வெளிநாட்டு முதலீடுகள் அதிக அளவில் வந்து தொழில் துறையில் தமிழகம் சிறந்து விளங்குகிறது என்று அமைச்சர் எ.வ.வேலு தெரிவித்தார்.