சென்னை விமான நிலையத்தில் தரையிறங்கும் விமானங்கள் மீது லேசர் ஒளி அடிக்கப்பட்ட சம்பவங்கள் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன. பரங்கிமலை மற்றும் கிண்டி பகுதிகளில் இருந்து லேசர் ஒளி அடிக்கப்பட்டதால் விமானிகள் தடுமாறும் நிலை ஏற்பட்டது. 

Chennai Flight Laser Attacks : அகமதாபாத்தில் இருந்து லண்டனுக்கு புறப்பட்ட விமானம் அடுத்த சில மணித்துளிகளில் கீழே விழுந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் விமானத்தில் பயணம் செய்த 241 பயணிகள் மற்றும் குடியிருப்பு பகுதியில் இருந்த மக்கள் என 275க்கும் மேற்பட்டவர்கள் உயிரிழந்தனர். இந்த சம்பவம் நாட்டையே அதிர்ச்சிக்குள்ளாக்கியது. இந்த விமான விபத்திற்கான காரணம் தொடர்பாக பல கட்ட விசாரணைகள் நடைபெற்று வருகிறது. இந்த சம்பவத்தால் விமானத்தில் பயணிக்க மக்கள் அச்சப்பட்டு வரும் நிலையில் சென்னை விமான நிலையத்தில் தரையிறங்கும் விமானங்கள் மீது சமீபத்தில் லேசர் ஒளி அடிக்கப்பட்ட சம்பவங்கள் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன.

விமானத்தின் மீது பாய்ந்த லேசர் ஒளி

கடந்த மே மாதம் 25 மற்றும் ஜூன் 5 தேதிகளில் துபாயிலிருந்து வந்த எமிரேட்ஸ் விமானங்கள் மீது லேசர் ஒளி அடிக்கப்பட்டுள்ளது. தரையிறங்கும்போது பரங்கிமலை பகுதியிலிருந்து லேசர் ஒளி அடிக்கப்பட்டதால் விமானிகள் ஒரு சில நிமிடங்கள் தடுமாறும் நிலை ஏற்பட்டது. இதனையடுத்து சுதாரிக்கொண்ட விமானி பாதுகாப்பாக விமானத்தை தரையிறக்கினார். 

அடுத்ததாக கடந்த சில நாட்களுக்கு முன்பாக புனேவில் இருந்து 178 பயணிகளுடன் சென்னை வந்து தரையிறங்கிய ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானத்தின் மீது அதிகாலையில் கிண்டி பகுதியிலிருந்து சக்திவாய்ந்த பச்சை நிற லேசர் ஒளி அடிக்கப்பட்டுள்ளது. இதனால் விமானத்தை சரியான ஓடுபாதையில் தரையிறக்க சிரமப்பட்ட விமானி சாமர்த்தியமாக செயல்பட்டு விமானத்தை தரையிறக்கினார்.

இந்திய கடற்படை விமானத்தின் மீது பாய்ந்த லேசர் ஒளி

இந்த சம்பவம் தொடர்பாக அடுத்தடுத்து புகார் தெரிவிக்கப்பட்டு வந்ததையடுத்து போலீசார் பரங்கிமலை மற்றும் கிண்டி பகுதியில் தீவிர விசாரணையில் ஈடுபட்டுள்ளனர். இதனிடையே நேற்று இரவு 9 மணியளவில், கடலோர ரோந்து பணியை முடித்து பரங்கிமலை விமானத் தளத்திற்கு திரும்பிய இந்திய கடற்படையின் டோர்னியர் விமானத்தின் மீதும் லேசர் ஒளி பரங்கிமலை பகுதியிலிருந்து இருந்து அடிக்கப்பட்டது. இதனால் விமான பைலட் சற்று தடுமாறினார். சென்னையில் அடுத்தடுத்து நிகழும் இதுபோன்ற சம்பவங்கள் விமான பைலட் மற்றும் விமான பயணிகளை அதிர்ச்சி அடைய செய்துள்ளது. சென்னை விமான நிலைய காவல்துறையினர், பரங்கிமலை மற்றும் கிண்டி காவல் நிலையங்களுடன் இணைந்து, சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து லேசர் ஒளி அடித்தவர்களைத் தேடி வருகின்றனர்.

மேலும் விமானங்கள் மீது லேசர் ஒளி அடித்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என சென்னை காவல் ஆணையர் அருண் எச்சரித்துள்ளார். விமான நிலையம் அருகே லேசர் ஒளி மற்றும் வெப்பக் காற்று பலூன்கள் பயன்படுத்த தடை விதிக்கப்பட்டுள்ளது. இதனை மீறுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என போலீசார் ஏற்கனவே எச்சரித்த நிலையில் மீண்டும் இது போன்ற சம்பவங்கள் தொடர்வது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது..

லேசர் வெளிச்சத்தால் ஏற்படும் பாதிப்புகள் என்ன.?

விமானத்தின் மீது லேசர் ஒளி அடிக்கப்பட்டால் பைலட்கள் தற்காலிகமாக பார்வை திறன் குறைவதால் விமானத்தை சரியாகக் கட்டுப்படுத்துவது கடினமாகலாம். இது விமானத்தை தரையிறங்குதல் போன்ற முக்கியமான நேரங்களில் ஆபத்தை ஏற்படுத்தும். மேலும் இரவு நேரத்தில் இது மிகவும் ஆபத்தானது, ஏனெனில் பைலட்களின் கண்கள் இருட்டுக்கு ஏற்றவாறு இருக்கும், மற்றும் திடீர் லேசர் ஒளி பார்வையை பாதிக்கலாம் எனவே விமானத்தின் மீது லேசர் ஒளி அடிப்பது தண்டனைக்குரிய குற்றமாகும்.