தமிழக அரசு மகளிர் தொழில்முனைவோருக்கு ஒரு லட்சம் வரை கடன் உதவி மற்றும் மாணவர்களுக்கு மடிக்கணினி வழங்க திட்டமிட்டுள்ளது. மகளிர் நலன் மற்றும் மாணவர்களின் தொழில்நுட்ப அறிவை மேம்படுத்தும் நோக்கில் இந்த திட்டங்கள் செயல்படுத்தப்படுகின்றன.
Tamil Nadu Budget : தமிழக சட்டபேரவையில் 2025-2026ஆம் ஆண்டிற்கான நிதி நிலை அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. அந்த வகையில் தமிழக சட்டமன்ற தேர்தலுக்கு இன்னும் 10 மாதங்கள் மட்டுமே உள்ள நிலையில் எதிர்பார்த்தது போல பல்வேறு முக்கிய அறிவிப்புகள் இடம்பெற்றிருந்து. அந்த வகையில் கல்லூரி மாணவர்களுக்கு லேட்பாட், அரசு ஊழியர்களுக்கு சலுகை உள்ளிட்ட அறிவிப்புகள் வெளியிடப்பட்டது. இது தொடர்பாக நிதி நிலை அறிக்கை தாக்கல் செய்த அமைச்சர் தங்கம் தென்னரசு சட்டசபையில் வெளியிட்ட அறிவிப்பில், மகளிர் நலன் காக்க சுய உதவிக் குழுக்கள், விடியல் பயணம், கலைஞர் மகளிர் உரிமைத் திட்டம், புதுமைப்பெண், தோழி பணிபுரியும் பெண்கள் விடுதியென பல்வேறு முன்னோடித் திட்டங்களை நாடே வியந்து பார்க்கும் வண்ணம் நமது அரசு செயல்படுத்தி வருகிறது.

10 லட்சம் ரூபாய் வங்கி கடன்
இதன் அடுத்த கட்டமாக, தமிழ்நாட்டின் பொருளாதார வளர்ச்சியில் பெண்களின் பங்கு மேலும் அதிகரிக்க வேண்டும் என்ற நோக்கத்துடன், அடுத்து வரும் ஐந்து ஆண்டுகளில் ஒரு இலட்சம் மகளிரை தொழில்முனைவோராக உயர்த்திடும் பெருந்திட்டம் ஒன்று செயல்படுத்தப்படும். இத்திட்டத்தின் கீழ் 20 சதவீத மானியத்துடன் 10 இலட்சம் ரூபாய் வரை வங்கிக் கடன் பெற்று, மகளிர் பல்வேறு தொழில்கள் தொடங்கிட உரிய திறன் மேம்பாட்டுப் பயிற்சிகள், விற்பனைக்கான ஆலோசனைகளும் 2025-26 ஆம் ஆண்டில் வழங்கப்படும். இத்திட்டத்திற்கான நிதியுதவிக்கென 225 கோடி ரூபாய் ஒதுக்கப்படும் என அறிவித்தார்.
கல்லூரி மாணவர்களுக்கு லேப்டாப்
இதனை தொடர்ந்து முக்கிய அறிவிப்பாக செயற்கை நுண்ணறிவு உலகெங்கும் பெரும் தாக்கத்தை உருவாக்கி வரும் இந்த வேளையில், நமது மாணவர்களின் தொழில்நுட்ப அறிவையும் அவர்களின் தனித்திறன் மேம்பாட்டுப் பயிற்சிகளையும் தொடர்ந்து வழங்கிட வேண்டிய வரலாற்றுத் தேவை தற்போது எழுந்துள்ளது. அதைக் கவனமாக பரிசீலித்த நமது அரசு, நான்கு வருடங்களுக்கு முன் மக்கள் மன்றத்தில் வழங்கிய வாக்குறுதியை நிறைவேற்றும் விதமாக,

2ஆயிரம் கோடி ஒதுக்கீடு
தமிழ்நாட்டின் பல்வேறு கலை, அறிவியல், பொறியியல், வேளாண்மை மற்றும் மருத்துவம் உள்ளிட்ட அனைத்துக் கல்லூரிகளிலும் பயின்று வரும் மாணவர்களுக்கு உயர் தொழில்நுட்பச் சாதனங்களை வழங்கிடத் திட்டமிட்டுள்ளது. முதற்கட்டமாக, அடுத்த இரண்டு ஆண்டுகளில் 20 இலட்சம் கல்லூரி மாணவர்களுக்கு, அவரவர் விருப்பத்தின் அடிப்படையில், ஒவ்வொருவருக்கும் கைக்கணினி அல்லது மடிக்கணினி வழங்கப்படும். எதிர்காலத்தில் உயர் தொழில்நுட்ப உலகில் நமது இளைஞர்கள் அறிவாயுதம் ஏந்தி வெற்றிவலம் வருவதை உறுதிசெய்திடும் நோக்கில் அறிமுகப்படுத்தப்படும். இத்திட்டத்திற்காக 2025-26 ஆம் நிதியாண்டில் 2,000 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது
