செல்போன் பேசிக் கொண்டு சாலையில் நடந்து சென்ற பெண்ணிடம், பைக்கில் வந்த ஆசாமி, லாவகமாக செல்போனை பறித்து சென்ற சம்பவம் வாணியம்பாடியில் நடந்துள்ளது.

சாலையில் பெண்கள் தனியாக நடமாட முடியாத நிலையே உள்ளது. தனியாக செல்லும் பெண்களிடம் இருந்து செயின் பறிக்கப்படுவதும், செல்போன்கள் பறிக்கப்படுவதும் நடந்து வருகின்றன. இதுபோன்ற சம்பவங்கள் கடந்த சில மாதங்களாகவே அதிகரித்து வருகின்றன.

அண்மையில் சென்னையின் இருவேறு இடங்களில் பெண்களிடம் இருந்து செயின் பறிக்கப்பட்டது. இதில் அந்த இரு பெண்களும் பலத்த காயமடைந்தனர். சிசிடிவி கேமரா மூலம் அந்த நபர்களை போலீசார் கைது செய்துள்ளனர்.

செல்போனை கைகளில் வைத்துச் செல்பவரிடத்தில் இருந்தும், செல்போன் பேசி செல்பவரிடத்தில் இருந்தும், பைக்கில் வரும் நபர்கள் லாவகமாக செல்போனை பறித்து செல்லும் சம்பவங்களும் தற்போது அதிகரித்து வருகின்றன. இது போன்ற சம்பவங்கள் தமிழகம் முழுவதும் நடந்து வருகின்றன.

இதேபோல் வேலூர் மாவட்டம் வாணியம்பாடி, கோட்டைப்பகுதியைச் சேர்ந்த வைரக்கொடியிடம் இருந்து செல்போனை மர்ம நபர்கள் லாவகமாக பறித்துச் சென்றுள்ளனர்.

வைரக்கொடி, வீட்டில் இருந்து கடைத் தெருவுக்கு நடந்து வந்துள்ளார். அப்போது அவர் செல்போனில் பேசியபடியே சாலையில் நடந்து வந்துள்ளார். இதனை நோட்டமிட்ட மர்ம நபர்கள், வைரக்கொடியின் அருகில் வந்து லாவகமாக செல்போனை பறித்துச் சென்றுள்ளனர். இதனால் பதறிப்போன வைரக்கொடி அருகில் உள்ள போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். 

வைரக்கொடியின் புகாரை அடுத்து,  போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். வைரக்கொடியிடம் இருந்து செல்போன் பறிக்கப்பட்ட காட்சி அப்பகுதியில் உள்ள சிசிடிவி கேமராவில் பதிவாகி உள்ளது. இந்த காட்சி பதிவுகளை வைத்து போலீசார் மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.