எஸ்ஐ ஒருவர், தனது டெபிட் கார்டு மூலம் பல்வேறு பொருட்கள் வாங்கியுள்ளார். அதற்கான கட்டணத்துடன், கூடுதலாக பணம் பிடித்தம் செய்யப்பட்டது. இதனால், சந்தேகம் அடைந்த அவர், சம்பந்தப்பட்ட வங்கிக்கு சென்று, அங்கிருந்த அதிகாரி ஒருவரிடம் கேட்டார்.

அங்கிருந்த அதிகாரி, “நீங்கள் வாங்கிய பொருட்களுக்கான பணத்தை டெபிட் கார்டு மூலம் கொடுத்துவிட்டீர்கள். ஆனால், அதற்கான சர்வீஸ் சார்ஜ், கூடுதலாக பிடிக்கப்பட்டுள்ளது” என தெரிவித்தார். மேலும், உங்களது இருப்பு குறைவாக இருந்துள்ளது என கூறியுள்ளார்.

இதுபற்றி விபரங்கள் தேவையானால், அங்குள்ள பெண் அதிகாரியிடம் சென்று, கேளுங்கள் என கூறி அனுப்பி வைத்தார். அதன்படி அந்த எஸ்ஐ, பெண் அதிகாரியிடம், தனது வங்கி கணக்கில் இருந்து பணம் கூடுதலாக பணம் பிடித்தம் செய்தது பற்றி கேட்டுள்ளார்.

அதற்கு அந்த பெண் அதிகாரி, “அக்கவுன்ட்டில் 500 ரூபாய் வைக்க வக்கு இல்லையா. அக்கவுன்ட்டை மெயின்டென் பன்னனும்னு தெரியாதா. உங்க இஷ்டத்துக்கு கார்டை போட்டு தேய்ச்சி தேய்ச்சி எடுப்பீங்க.., அப்படி எடுத்தா பணம் பிடிக்கத்தான் செய்வார்கள்.” என கேட்டுள்ளார். இதனால், கொதிப்படைந்த எஸ்ஐ, வங்கியின் முதன்மை மேலாளரை சந்தித்து, இதுபற்றி புகார் செய்தார்.

இதையடுத்து முதன்மை மேலாளர், அந்த பெண் அதிகாரியை அழைத்து விசாரித்தார். அப்போது எஸ்ஐ,“என்னுடைய பணம் நிறுத்தப்பட்டுள்ளது. அதற்கு என்ன காரணம் என்று மட்டுமே கேட்கிறேன். ஏன் அதை நிறுத்தினீர்கள் என கேட்கவில்லை. என்னுடைய கேள்விக்கு,பெண் அதிகாரி முறையான பதில் கூறவில்லை” என்றார்.

அதற்கு அந்த பெண் அதிகாரியும், விடாமல் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். அந்த நேரத்தில், “எனக்கும் தெரியும், உங்களை போல் டிபார்ட்மென்ட்டில் உள்ளவர்களை, கை சுத்தமானவர்களை, உயர் அதிகாரிகளை” என்றார்.

அதற்கு, “போலீஸ் என்றால் லஞ்சம் வாங்கி பிழைப்பவர்களா. வாங்கும் சம்பளத்தை, வங்கியிலேயே போட்டு வைத்துவிட்டு,எடுக்காமல் வேடிக்கை பார்ப்பார்களா...” என எஸ்ஐ கேட்டார்.