L Murugan on ADGP Kalpana Nayak Life Threat: காவல்துறை ஏடிஜிபி கல்பனா நாயக்கின் அலுவலகத்தில் நடந்த தீ விபத்து கொலை முயற்சியாக இருக்கலாம் என பாஜக மாநில தலைவர் எல். முருகன் சந்தேகித்துள்ளார். முதல்வர் ஸ்டாலின் உடனடியாக தலையிட வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

காவல்துறையினருக்கு தேவையான பாதுகாப்பை உறுதி செய்ய முதல்வர் மு.க.ஸ்டா‌லி‌ன் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என பாஜக மாநிலங்களைவை எம்.பி. எல். முருகன் வலியுறுத்தியுள்ளார்.

இதுகுறித்து எக்ஸ் பக்கத்தில் எல்.முருகன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

"தமிழக காவல்துறை ஏடிஜிபி திருமதி.கல்பனா நாயக் அவர்களின் அலுவலகத்தில், கடந்தாண்டு ஜூலை மாதம் நடந்த தீ விபத்தானது, தன்னை கொலை செய்வதற்காக மேற்கொள்ளப்பட்ட முயற்சி என்று அவர் புகார் அளித்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

சீருடைப் பணியாளர் தேர்வாணையத்தின் ஏடிஜிபி-யாக திருமதி.கல்பனா நாயக் அவர்கள் பொறுப்பேற்றுக் கொண்ட பிறகு, அவர் பதவியேற்பதற்கு முந்தைய காலத்திலும், பதவி வகித்த காலத்திலும், காவல்துறை துணை ஆய்வாளர் நியமனம் செய்வதில் முறைகேடுகள் நடைபெற்றிருப்பதாக அவர் ஏற்கனவே புகார் அளித்துள்ளார்.

2025 உலகின் டாப் 10 சக்திவாய்ந்த நாடுகள் பட்டியல்! இந்தியாவுக்கு எந்த இடம்?

காவல்துறை பணியிடங்களை நியமனம் செய்வதில் ஏற்படுகின்ற முறைகேடுகளை வெளிச்சத்திற்கு கொண்டுவர முற்படும் அதிகாரிகளை அச்சுறுத்தும் வகையில் தீ விபத்து முயற்சியோ என்ற அச்சம் எழுகிறது. 

இச்சம்பவம் குறித்து, தமிழக காவல்துறை தலைவருக்கும், தலைமைச் செயலருக்கும் விவரமாக புகார் கடிதம் அளிக்கப்பட்டும், இன்று வரை அதற்கான விசாரணை மேற்கொண்டிருப்பதாக தெரியவில்லை. மாறாக, சீருடைப் பணியாளர் தேர்வாணையத்தில் அவருக்கான முக்கியத்துவம் குறைக்கப்பட்டதோடு, துறை சார்ந்த பணிகளில் புறக்கணிக்கப்பட்டு இருப்பது வேதனையை அளிக்கிறது.

தமிழகத்தில் அமைதியை நிலைநாட்ட வேண்டிய முக்கியப் பொறுப்பில் உள்ள காவல்துறையினருக்கு தேவையான பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டியது காவல் துறையை பொறுப்பில் வைத்திருக்கும் முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டா‌லி‌ன் அவர்களின் கடமை. இந்த விவகாரத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள் உடனடியாக தலையிட்டு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தி கேட்டுக் கொள்கிறேன்."

இவ்வாறு எல். முருகன் தன் எக்ஸ் பதிவில் கூறியுள்ளார். 

முகேஷ் அம்பானி குடும்பத்தின் கல்வித் தொகுதி என்ன? நிறைய படிச்சது யார் தெரியுமா?

Scroll to load tweet…