Kurangani fire accident kovai jayashree died

குரங்கணி வனப்பகுதியில் ஏற்பட்ட தீ விபத்தில் சிக்கிய ஜெயஸ்ரீ, கோவை மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் இன்று அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதனையடுத்து குரங்கணி தீவிபத்தில் பலியானவர்களின் எண்ணிக்கை 18 ஆக அதிகரித்துள்ளது.

தேனி மாவட்டம் போடி அருகே உள்ள குரங்கணி வனப்பகுதியில் சென்னை மற்றும் ஈரோடு பகுதியைச் சேர்ந்த 36 பேர் கடந்த 11-ந் தேதி மலையேற்ற பயிற்சிக்கு வந்தனர். அப்போது ஏற்பட்ட காட்டுத் தீயில் சிக்கி 17 பேர் உயிரிழந்தனர்.

பலத்த காயங்களுடன் மீட்கப்பட்ட பலர் மதுரை, கோவை, சென்னை உள்ளிட்ட பல இடங்களில் உள்ள மருத்துவனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த விபத்தில் 50 சதவீத காயங்களுடன் மதுரையில் சிகிச்சை பெற்று வந்த கோவையைச் சேர்ந்த ஜெயஸ்ரீ என்பவரின் பெற்றோர், அவரை கோவை அழைத்துச் சென்று சிகிச்சை அளிக்க விரும்பினர்.

இதையடுத்து தமிழக அரசு ஏற்பாடு செய்து கொடுத்த ஏர் ஆம்புலன்ஸ் மூலம் ஜெயஸ்ரீ கோவையில் உள்ள கங்கா மருத்துமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.

கடந்த 10 நாட்களாக அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. மேலும் ஜெயஸ்ரீக்கு தோல் மாற்று அறுவை சிகிச்சையும் செய்யப்பட்டது

இந்நிலையில் ஜெயஸ்ரீ இன்று சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். இதையடுத்து குரங்கனி தீவிபத்தில் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 18 ஆக உயர்ந்துள்ளது.