தருமபுரி

கே.ஆர்.பி. அணையின் உபரிநீரை காரிமங்கலம் சுற்றுவட்டாரப் பகுதியில் உள்ள ஏரிகளில் நிரப்ப வேண்டும் என்று விவசாயிகள் ஆட்சியரிடம் கோரிக்கை மனு அளித்தனர்.

தருமபுரி மாவட்ட மக்கள் குறைதீர்க்கும் கூட்டம் தருமபுரி ஆட்சியர் அலுவலகத்தில் நடைப்பெற்றது. இதற்கு ஆட்சியர் விவேகானந்தன் தலைமைத் தாங்கினார்.

இந்தக் கூட்டத்தில் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த மக்கள் கலந்து கொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி மனுக்கள் அளித்தனர்.

இந்தக் கூட்டத்தில் காரிமங்கலம் தாலுகா உச்சம்பட்டி, தெல்லம்பட்டி, கரகப்பட்டி ஆகிய பகுதிகளை சேர்ந்த விவசாயிகள் மனு ஒன்றை கொடுத்தனர்

.அதில், “காரிமங்கலம் சுற்றுவட்டார பகுதிகளில் 5 ஆயிரம் ஏக்கரில் விவசாய பணிகள் மேற்கொள்ளப்பட்டு உள்ளன. கே.ஆர்.பி. அணையிலிருந்து கால்வாய் வெட்டி உபரிநீரை கொண்டுவந்து இந்த பகுதியில் உள்ள ஏரிகளில் நிரப்ப நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.

கடந்த இரண்டு ஆண்டுகளாக கடும் வறட்சி காரணமாக ஏரிகளுக்கு அணை தண்ணீர் வரவில்லை. தற்போது கே.ஆர்.பி.அணை முழு கொள்ளளவை எட்டியுள்ளது.

எனவே உச்சம்பட்டி, தெல்லம்பட்டி, கரகப்பட்டி ஏரிகளுக்கு உடனடியாக அணையின் உபரி நீரை நிரப்ப அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று அதில் கூறப்பட்டு இருந்தது.

தர்மபுரி மாவட்டத்தை சேர்ந்த சமூக ஆர்வலர்கள் ஆட்சியரிடம் கொடுத்த மனுவில், “தர்மபுரி மாவட்டத்தில் சிறுமிகளுக்கு எதிரான பாலியல் கொடுமைகளில் ஈடுபட்டு கைதானவர்களுக்கு போக்சோ சட்டத்தின் கீழ் தண்டனை விதிக்கப்பட்டு வருகிறது.

பாதிக்கப்பட்ட சிறுமிகளுக்கு நிவாரண உதவி கிடைக்க மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று குறிப்பிட்டு இருந்தனர்.

மக்களிடம் இருந்து மனுக்களை பெற்று விசாரணை நடத்திய ஆட்சியர் விவேகானந்தன் அவற்றை சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளிடம் வழங்கி உரிய நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டார்.