kolathur doctor murder

நேற்று முன்தினம் கொளத்தூரில் டாக்டர் ராஜஷ்குமார் என்பவர் மர்மமாக இறந்த வழக்கில் உறவினர் மகேந்திரன் என்பவரை போலீசார் கைது செய்துள்ளனர். 

சென்னை, கொளத்தூர் பூம்புகார் நகர், 2-வது பிரதான சாலையை சேர்ந்தவர் நாகராஜ். இவரது மனைவி சாந்தி. இவர்களுக்கு ராஜேஷ்குமார் (26) என்ற மகனும், ஸ்ரீரேகா என்ற மகளும் உள்ளனர். ராஜேஷ்குமார், டாக்டர் படித்து முடித்துவிட்டு, சென்னை முகப்பேரில் சொந்தமாக கிளினிக் நடத்தி வந்தார்.

கடந்த சில மாதங்களாக ராஜேஷ் குமாருக்கு வரன் பார்த்து வந்தனர். அதன்படி அவருக்கு திருமண நிச்சயம் முடிந்தது. நாளை (3-ம் தேதி) திருமணம் நடத்த அனைத்து ஏற்பாடுகளும் நடந்து வந்தன. இதையொட்டி நண்பர்கள், உறவினர்களுக்கு பத்திரிகை வைத்து கொண்டு இருந்தனர்.

இந்த நிலையில், கடந்த 27-ம் தேதி நாகராஜ், சாந்தி ஆகியோர் திருமண பத்திரிகை வைப்பதற்காக வெளியே சென்றனர். வீட்டில் ராஜேஷ், ஸ்ரீரேகா ஆகியோர் மட்டும் தனியாக இருந்தனர். இரவு 8 மணியளவில் சாப்பிட்டு முடித்த ராஜேஷ்குமார், நடைபயிற்சி செல்வதற்காக வெளியே சென்றார். அதன்பின் அவர் வீடு திரும்பவில்லை.

இதனால், அதிர்ச்சியடைந்த குடும்பத்தினர், ராஜேஷ்குமாரை உறவினர்கள், நண்பர்கள் வீடுகள் என பல்வேறு இடங்களில் தேடினர். ஆனால், எந்த தகவலும் இல்லை. இதுகுறித்து கொளத்தூர் போலீசில் புகார் செய்தனர். போலீசார் வழக்குப்பதிவு செய்து மாயமான ராஜேஷ்குமாரை தேடி வந்தனர்.

இந்த நிலையில், நேற்று முன்தினம் மாலை நாகராஜ் வீட்டின் கீழ் 12 அடியில் மட்ட குடிநீர் தொட்டியில் இருந்து கடும் துர்நாற்றம் வீசியது. இதையடுத்து, தொட்டியை திறந்து பார்த்தபோது, ராஜேஷ்குமார் அழுகிய நிலையில், சடலமாக கிடந்ததை கண்டு, குடும்பத்தினர் கதறி அழுதனர். 

தகவலறிந்து கொளத்தூர் போலீசார், சம்பவ இடத்துக்கு சென்று சடலத்தை கைப்பற்றி கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். பிரேத பரிசோதனையில், ராஜேஷ்குமார் உடலில் காயங்கள் இருப்பது தெரியிவந்தது. இது குறித்து போலுசார் தீவிர விசாரணை நடத்தினர்.

இந்த நிலையில், ராஜேஷ்குமாரின் உறவினர் மகேந்திரன் என்பவரை போலீசார் கைது செய்துள்ளனர். இது குறித்து மகேந்திரனிடம் போலீசார் விசாரணை நடத்தியதில் கடந்த 28 ஆம் தேதி இருவரும் ஒன்றாக மது அருந்தியதாகவும், அப்போது எங்களுக்குள் ஏற்பட்ட வாக்குவாதத்தில் ராஜேஷ்குமார் தாக்கியதாகவும் கூறியுள்ளார். இந்த தாக்குதலில் ராஜேஷ்குமார் உயிரிழந்ததை அடுத்து, இந்த கொலையை மறைக்க தண்ணீர் தொட்டியில் போட்டதாகவும் மகேந்திரன் கூறியுள்ளார். கைது செய்யப்பட்ட மகேந்திரனிடம் போலீசார் மேலும் விசாரணை நடத்தி வருகின்றனர்.