Kodanadu murder

மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு சொந்தமான கொடநாடு பங்களாவில் இருந்து 200 கோடி ரூபாய் கொள்ளையடிக்கப்பட்டதாகவும், இந்த சம்பவத்தில் கோவையைச் சேர்ந்த அதிமுக முக்கிய புள்ளி ஒருவருக்கு தொடர்பு உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

ஜெயலலிவுக்குச் சொந்தமான கொடநாடு எஸ்டேட்டின் காவலாளி ஓம்பகதூர் கடந்த சில நாட்களுக்கு முன்பு மர்ம நபர்களால் அடித்து கொலை செய்யப்பட்டார். தாக்குதலில் படுகாயமடைந்த மற்றொரு காவலாளியிடம் கோவை மற்றும் நீலகிரி போலீசார் கிடுக்குப்பிடி விசாரணை நடத்தினர். 

ஜெயலலிதா தொடர்பான பல முக்கிய ஆவணங்கள் கொள்ளையடிக்கப்பட்டதாகவும் பகீர் தகவல்கள் ரெக்கை கட்டிப் பறந்தன. மு.க.ஸ்டாலின், ஓ.பி.எஸ். உள்ளிட்ட பல முக்கிய அரசியல் கட்சித் தலைவர்களும் இக்கொலை குறித்து அரசு விளக்கம் அளிக்க வேண்டும் என்று வலியுறுத்தினர்.



இச்சம்பவத்தின் பின்னணியில் ஜெயலலிதாவின் முன்னாள் கார் ஓட்டுநர் கனகராஜ் இருப்பதாக சந்தேகிக்கப்பட்டது. இது தொடர்பான தகவல் வெளியே கசிந்ததும் கனகராஜ் தலைமறைவு ஆனதாகக் கூறப்படுகிறது. 

கனகராஜை கைது செய்தால் அனைத்து ரகசியும் தெரியவந்துவிடும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் சேலம் ஆத்தூர் இடையே இன்று நடைபெற்ற சாலை விபத்தில் அவர் உடல் நசுங்கி உயிரிழந்தார். இதே போன்று இந்த சம்பவத்தில் தொடர்புடையதாக கூறப்படும் சயான் என்பவரும் கார் விபத்தில் சிக்கி சிகிச்சை பெற்று வருகிறார்.

இதனிடையே இந்த சம்பவத்தில் 11 பேர் ஈடுபட்டதாகவும், அவர்கள் காவலாளியைக் கொன்றுவிட்டு, பங்களாவுக்குள் சென்றதாகவும், அங்கு எதுவும் கிடைக்காததால் ஜெயலலிதாவின் விலை உயர்ந்த வாட்சுகளை மட்டும் திருடில் சென்றதாகவும் நீலகிரி மாவட்ட எஸ்.பி.முரளி ரம்பா தெரிவித்திருந்தார்.

ஆனால் கொடநாடு பங்களாவில் இருந்து 200 கோடி ரூபாய் கொள்ளையடிக்கப்பட்டுள்ளதமாகவும், இந்த சம்பவத்தில் கோவையைச் சேர்ந்த அதிமுக பிரமுகருக்கு தொடர்பு உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.