Killing murderer as north indian kidnapp gang Case filed against 44 people

திருவண்ணாமலை

திருவண்ணாமலையில் குழந்தை கடத்தல் கும்பல் என நினைத்து மூதாட்டியை கொலை செய்த வழக்கில் கைதான 44 பேரின் காவல் 20-ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. 

திருவண்ணாமலை மாவட்டம், போளூர் அருகே அத்திமூர் களியம் கிராமத்தில் சென்னையில் இருந்து சாமி கும்பிட கோவிலுக்கு சென்றவர்களை கடந்த மே மாதம் 9-ஆம் தேதி குழந்தை கடத்தல் கும்பல் என்று கருதி கிராம மக்கள் அடித்து உதைத்தனர். 

இதில், சென்னை பழைய பல்லாவரத்தைச் சேர்ந்த ருக்மணியம்மாள் (65) என்பவர் பரிதாபமாக உயிரிழந்தார். மேலும், நான்கு பேர் படுகாயம் அடைந்தனர். இது தொடர்பாக 62 பேர் மீது காவலாளர்கள் வழக்குப்பதிந்தனர். இதில் 44 பேர் கைது செய்யப்பட்டனர். 

இவர்கள் வேலூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். இந்த 44 பேரின் காவல் நேற்றுடன் முடிந்தது. இது தொடர்பான வழக்கு நேற்று திருவண்ணாமலை ஜூடிசியல் மாஜிஸ்திரேட்டு எண்- 2 நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. 

மாஜிஸ்திரேட்டு காணொலி காட்சி மூலம் விசாரணை மேற்கொண்டார். அப்போது அவர், இந்தச் சம்பவத்தில் கைதான 44 பேரின் காவலை வருகிற 20-ஆம் தேதி வரை நீட்டிப்பு செய்து உத்தரவிட்டார்.

இதனிடையில் கைதான 44 பேரையும் போளூர் ஜூடிசியல் மாஜிஸ்திரேட்டு நீதிமன்றத்துக்கு அழைத்து வருவார்கள் என்று நினைத்து அவர்களது குடும்பத்தினர், உறவினர்கள், நண்பர்கள் போளூர் நீதிமன்றம் வளாகத்திலும், சாலையோர கடைகளிலும் கும்பல், கும்பலாக காத்திருந்தனர்.

ஆனால், கைதானவர்களை நீதிமன்றத்துக்கு அழைத்து வராததால் அவர்களது குடும்பத்தினர் பெரும் ஏமாற்றம் அடைந்தனர்.