இளம்பிள்ளை,
இளம்பிள்ளை அருகே மர்ம கும்பலால் கொலை செய்யப்பட்ட முன்னாள் ஊராட்சி மன்ற துணைத் தலைவரின் உடல், ஓடையில் வீசப்பட்டுக் கிடந்தது.
சேலம் மாவட்டம், இளம்பிள்ளை அடுத்துள்ள மகுடஞ்சாவடி கோட்டைமேடு பகுதியைச் சேர்ந்தவர் மாதேஷ் என்கிற சேட்டு (42). இவர் கடந்த 2006–ஆம் ஆண்டு முதல் 2011–ஆம் ஆண்டு வரை மகுடஞ்சாவடி ஊராட்சி மன்ற துணைத் தலைவராக பதவி வகித்துள்ளார்.
சமீபகாலமாக இவர் வீரபாண்டி, மகுடஞ்சாவடி, இடைப்பாடி பகுதிகளில் அரசு திட்டப் பணிகளை ஒப்பந்தம் எடுத்து பணிகளை செய்வது, தனிநபர் கழிப்பிடங்களையும் ஏலம் எடுத்து நடத்தி வருவது போன்ற பணிகளை செய்து வந்தார்.
இவருக்கு செந்தாமரைச்செல்வி என்ற மனைவியும், அரிகிருஷ்ணன் (7) என்ற மகனும், சுகாந்த கிருஷ்ணன் (2) என்ற குழந்தையும் உள்ளனர். மாதேஷ் அதே பகுதியில் உள்ள ஜெயபுரியில் தனது மாமனார் வீட்டில் குடும்பத்தினருடன் வசித்து வந்தார். மேலும் அதே பகுதியில் புதிய வீடு ஒன்றும் கட்டி வந்துள்ளார்.
இந்த நிலையில் குழந்தை சுகாந்த கிருஷ்ணனுக்கு உடல்நலம் பாதிக்கப்பட்டது. அதனால், குழந்தையை சேலத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்துள்ளார்.
இதைத்தொடர்ந்து அவருடைய மனைவி மற்றும் மற்றொரு மகன் அரிகிருஷ்ணன் ஆகியோர் மருத்துவமனையில் தங்கி குழந்தையை கவனித்து வந்தனர். அதே நேரத்தில் வீட்டில் தனியாக இருந்து மாதேஷ் தனது வேலைகளை செய்து வந்துள்ளார்.
இந்த நிலையில் செவ்வாய்க்கிழமை அதிகாலை மகுடஞ்சாவடியில் இருந்து இடைப்பாடி செல்லும் சாலையில் உள்ள மேம்பாலத்தின் அருகே சாத்தப்பன் கோவில் பகுதியில் சுடுகாட்டு ஓடையில் கழுத்து இறுக்கப்பட்டு வாயில் இரத்தம் வழிந்த நிலையில், இரத்தக் காயத்துடன் மாதேஷ் பிணமாக கிடந்துள்ளார். அவருடைய உடலுக்கு சற்று தொலைவில் அவருடைய மோட்டார் சைக்கிள் நின்றது.
இது குறித்து அந்த பகுதி மக்கள் மகுடஞ்சாவடி காவல்துறையினருக்குத் தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் சேலம் மாவட்ட காவல் சூப்பிரண்டு ராஜன், சங்ககிரி துணை காவல் சூப்பிரண்டு அசோக்குமார், காவல்துறை இன்ஸ்பெக்டர்கள் ராஜரணவீரன், சுரேஷ்குமார் மற்றும் காவலாளர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினர்.
மாதேஷ் இறந்த தகவலை கேள்விப்பட்டு அங்கு வந்த அவருடைய மனைவி மற்றும் உறவினர்கள் அவருடைய உடலை பார்த்து கதறி அழுதனர்.
இதைத் தொடர்ந்து மாதேஷின் உடலை கைப்பற்றிய காவல்துறையினர் அவருடைய உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் சம்பவ இடத்தில் தடயவியல் நிபுணர் கொளஞ்சியப்பன் தடயங்களை பதிவு செய்தார்.
இந்த சம்பவம் குறித்து மகுடஞ்சாவடி காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மாதேஷ் அணிந்திருந்த தங்க செயின் மற்றும் மோதிரம் திருடப்பட்டு இருப்பதும், அவர் வைத்திருந்த கைப்பை திறந்து கிடந்ததையும் காவல்துறையினர் கண்டுபிடித்து உள்ளனர்.
மாதேஷ் தினமும் கழிப்பிடங்களில் வசூலாகும் பணத்துடன் அந்த பாதையில் சென்று வந்ததாக கூறப்படுகிறது. எனவே அவர் பணத்துக்காக கொலை செய்யப்பட்டு இருக்கலாம் என்று காவல்துறையினர் கருதுகின்றனர்.
மர்ம நபர்கள் அவருடைய மோட்டார் சைக்கிளை வழிமறித்து அவருடைய கழுத்தை இறுக்கி கொலை செய்து விட்டு அவர் வைத்திருந்த பணத்தை திருடிச் சென்றிருக்கலாம் என்ற கோணத்தில் காவல்துறையினர் விசாரித்து வருகின்றனர்.
அதே நேரத்தில் அவருடைய மோட்டார் சைக்கிள் ‘சைடு லாக்‘ போடப்பட்ட நிலையில் அங்கு நிறுத்தப்பட்டுள்ளதால், அவருக்கு அறிமுகமான நபர்கள் அவரை வழிநிறுத்தி பேசிக்கொண்டு இருந்த போது கைகலப்பில் ஈடுபட்டு கொலை செய்து பிணத்தை ஓடையில் வீசிச்சென்று இருக்கலாமோ? என்ற கோணத்திலும் காவல்துறையினர் விசாரணையை தீவிரப்படுத்தி உள்ளனர்.
இதனிடையே அந்த பகுதியில் சந்தேகப்படும்படியாக சுற்றித் திரிந்த ஒருவரை சந்தேகத்தின் பேரில் பிடித்து காவல்துறையினர் விசாரித்து வருகின்றனர்.
இந்த பயங்கர கொலை சம்பவம் அந்த பகுதியில் திடீர் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
