அம்பேத்கர் புகைப்பட விவகாரம்.. திமுகவை திட்டித்தீர்த்து, இப்பொது போட்ட டீவீட்டை நீக்கிய குஷ்பூ - என்னாச்சு?
நீதிமன்றம் மற்றும் நீதிமன்ற வளாகங்களிலும் மகாத்மா காந்தி மற்றும் திருவள்ளுவர் ஆகியோரைத் தவிர வேறு எந்த தலைவரின் சிலைகளும், உருவப் படங்களும் வைக்கப்படக் கூடாது என, சென்னை உயர்நீதிமன்றத்தின் தலைமைப் பதிவாளர் அனைத்து நீதிமன்றங்களுக்கும் சுற்றறிக்கை அனுப்பினார்.
இதனை அடுத்து நீதிமன்றங்களில் உள்ள அண்ணல் அம்பேத்கரின் சிலைகளையும், உருவப் படங்களையும் நீக்க முயற்சிகள் எடுக்கப்பட்டு வருவதாக சில தகவல்கள் வெளியானது. மேலும் சென்னை ஆலந்தூர் புதிய நீதிமன்ற வளாகத்தில் உள்ள அம்பேத்கர் அவர்களுடைய படத்தை நீக்க அறிவுறுத்தப்பட்டதாகவும் தகவல்கள் வெளியானது.
இந்நிலையில் இதுகுறித்து பெரிய சர்ச்சை ஒன்று வெடித்தது, பாஜக தலைவர் அண்ணாமலை உட்பட பல அரசியல் தலைவர்கள் இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து வந்தனர். அரசியல் அமைப்பு சட்டங்களை அடிப்படையாகக் கொண்டுதான் நீதிமன்றங்கள் செயல்படுகின்றன என்றும், அந்த அரசியலமைப்பு சட்டத்தையே உருவாக்கிய அண்ணல் அம்பேத்கரின் சிலையையோ அல்லது புகைப்படத்தையோ அங்கு வைப்பதற்கு என்ன தடை என்று கூறி அண்ணாமலை அவர்கள் தனது ட்விட்டர் பக்கத்தில் தனது கருத்தினை வெளியிட்டு இருந்ததும் குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் இந்த விவகாரத்தில் தனது கருத்தினை இன்று தெரிவித்திருந்த நடிகையும், பாஜக தலைவருமான குஷ்பூ. திமுக அரசின் ஆணவத்தைத் தான் இந்த செயல் காட்டுகிறது. அரசியல் சாசன சட்டத்தை கொடுத்த அம்பேத்கர் படத்தை வைப்பதில் என்ன தவறு என்று கூறி மிக கடுமையான பதிவு ஒன்றை தனது ட்விட்டர் பக்கத்தில் போட்டிருந்தார்.
ஆனால் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவிற்கு, அரசியல் கட்சியை குறை கூறுவது எந்த விதத்தில் நியாயம் என்று, அவர் பதிவிட்ட கருத்தில் உள்ள தவறுகளை நெட்டிசன்கள் பலர் சுட்டிக்காட்டி அவரை கடுமையாக சாடினார். இந்நிலையில் தற்பொழுது தனது ட்விட்டர் பக்கத்தில் இருந்து அந்த பதிவினை நீக்கி உள்ளார் குஷ்பூ.