Asianet News TamilAsianet News Tamil

கீழ்வெண்மணி நினைவுச் சின்னம் கேலிக்குரிய அவமானம்: ஆளுநர் ஆர்.என்.ரவி கண்டனம்!

கீழ்வெண்மணி கிராமத்தில் வைக்கப்பட்டுள்ள நினைவுச் சின்னம் தியாகிகளுக்கு இழைக்கப்பட்ட கேலிக்குரிய அவமானம் என ஆளுநர் ஆர்.என்.ரவி விமர்சித்துள்ளார்

Keezhvenmani memorial is insult to the martyrs and the poor tn governor rn ravi condemns smp
Author
First Published Jan 29, 2024, 1:53 PM IST

தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக நாகப்பட்டினம் சென்றார். கீழ்வேளூர் ஒன்றியம் கீழவெண்மணியில் உள்ள தியாகிகள் நினைவு இல்லத்துக்குச் சென்ற அவர், அங்கு, கீழ்வெண்மணியில் 1968ஆம் ஆண்டில் நடந்த படுகொலை யின்போது, துப்பாக்கி குண்டுபட்டு காயமடைந்து, உயிர்பிழைத்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிஉறுப்பினர் தியாகி ஜி.பழனிவேலை சந்தித்து நலம் விசாரித்தார். மேலும், அவரிடம் கீழ்வெண்மணி சம்பவம் குறித்து கேட்டறிந்தார்.

அதன்பின்னர் அங்கிருந்து வேளாங்கண்ணி சென்ற ஆளுநர் ரவி, புனித ஆரோக்கிய அன்னை பேராலயத்தில் பிரார்த்தனை செய்தார். தொடர்ந்து நாகை நம்பியார் நகரில் உள்ள புதிய ஒளி மாரியம்மன் கோயிலில் தரிசனம் செய்தார். அதன்பிறகு, பொரவச்சேரியில் தமிழ் சேவா சங்கம் சார்பில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்ற ஆளுநர், பெருங்கடம்பனூரில் கட்டப்பட்டுள்ள 25 வீடுகளை பயனாளிகளுக்கு வழங்கினார்.

 

 

இந்த நிலையில், கீழ்வெண்மணி கிராமத்தில் வைக்கப்பட்டுள்ள நினைவுச் சின்னம் தியாகிகளுக்கு இழைக்கப்பட்ட கேலிக்குரிய அவமானம் என ஆளுநர் ஆர்.என்.ரவி தெரிவித்துள்ளார். இதுகுறித்து ஆளுநர் மாளிகை தனது எக்ஸ் பக்கத்தில், “நிர்வாக அக்கறையின்மை மற்றும் ஊழல் குற்றச்சாட்டால் நாகப்பட்டினம் மாவட்டத்தில் தகுதிவாய்ந்த ஏழை கிராமத்தினர் பிரதமரின் வீடு கட்டும் திட்டத்தின் பலனைப் பெற முடியாமல் போனது வருத்தமளிக்கிறது. பாட்டாளி வர்க்க சாம்பியனாக  அழைத்துக்கொள்ளும் ஓர் அரசியல் கட்சியால் கீழ்வெண்மணி கிராமத்தில் சுற்றிலும் ஏழைகளின் ஓலை குடிசைகளுக்கு மத்தியில், படுகொலை செய்யப்பட்ட 44 ஏழைத் தொழிலாளர்களை நினைவுகூரும் வகையில்   விலையுயர்ந்த கான்கிரீட் கட்டுமானம் ஒரு நினைவுச்சின்னமாக அமைந்திருப்பது முரணானது மட்டுமின்றி தியாகிகள் மற்றும் ஏழைகளுக்கு இழைக்கப்பட்ட கேலிக்குரிய அவமானமும் கூட” என பதிவிட்டுள்ளது.

2026-க்குள் பிச்சைக்காரர்கள் இல்லாத 30 நகரங்களை உருவாக்க மத்திய அரசு முடிவு..

முன்னதாக, தனது நாகப்பட்டினம் பயணம் குறித்து ஆளுநர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், “நாகப்பட்டினம் மாவட்டத்தில் உள்ள கீழ்வெண்மணி கிராமத்துக்குச் சென்று, '1968' படுகொலையில் உயிர் பிழைத்த ஒரே நபரான திரு.ஜி. பழனிவேலை சந்தித்தேன். மீனவர்கள் வசிக்கும் நம்பியார் நகரையும், பட்டியலின சமூகத்தினர் வாழும் ஜீவா நகரையும் பார்வையிட்டேன். கிராமங்கள் முழுவதும் மோசமான வறுமை நிலையில் இருப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்தேன். இந்த துரதிருஷ்டவசமான சகோதர, சகோதரிகள் சமூக மற்றும் பொருளாதார நீதிக்காக இன்னும் எத்தனை காலம் காத்திருக்க வேண்டும் என ஒருவரால் வியக்க மட்டுமே முடியும்.” என கூறப்பட்டிருந்தது.

நயினார் நாகேந்திரனுக்கு எம்.பி. சீட் வழங்க எதிர்ப்பு!

இந்த நிலையில், கீழ்வெண்மணி கிராமத்தில் வைக்கப்பட்டுள்ள நினைவுச் சின்னம் தியாகிகளுக்கு இழைக்கப்பட்ட கேலிக்குரிய அவமானம் என ஆளுநர் ஆர்.என்.ரவி விமர்சித்துள்ளார். முன்னதாக, ஆளுநர் வருகையை கண்டித்து கீழ்வெண்மணி வீரத் தியாகிகளின் 25ஆவது ஆண்டு நினைவுவளைவு, திருவாரூர் ரயில் நிலையம் அருகே கருப்புக் கொடி காட்டும் போராட்டத்தில் ஈடுபட்ட அரசியல் கட்சியினரை போலீசார் கைது செய்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Follow Us:
Download App:
  • android
  • ios