kavya madavan applied antipatory bail
மலையாள நடிகை பாலியல் துன்புறுத்தல் வழக்கில், கைதாகி சிறையில் அடைக்கப்பட்டுள்ள நடிகர் திலீப்பின் மனைவியும் நடிகையுமான காவ்யா மாதவன் முன் ஜாமீன் கோரி மனு தாக்கல் செய்துள்ளார். கேரள உயர் நீதிமன்றத்தை அணுகி, தான் கைது செய்யப்படும் அச்சம் இருப்பதால், முன் ஜாமீன் கோரி இன்று மனு கொடுத்ததாகக் கூறப்படுகிறது.
பிப்ரவரி 17ம் தேதி நடந்த ‘நடிகை பாலியல் துன்புறுத்தல்’ வழக்கு தொடர்பாக, ஏற்கெனவே நடிகை காவ்யா மாதவனிடம் போலீஸார் விசாரணை நடத்தியுள்ளனர். முன்னதாக, அங்கமாலி நீதிமன்றம், இந்த வழக்கில் கைதாகி சிறையில் அடைக்கப்பட்டுள்ள நடிகர் திலீப்புக்கு ஜாமீன் வழங்க மறுத்துவிட்டது. இந்நிலையில், அவரது மனைவி காவ்யா மாதவன், திலீப்பின் வழக்கறிஞர் ராமன் பிள்ளை மூலம், கேரள உயர் நீதிமன்றத்தில் முன் ஜாமீன் கோரி, சனிக்கிழமை இன்று மனு தாக்கல் செய்துள்ளார். அவரது மனுவில், போலீஸார் தொடர்ந்து தன்னை விசாரணை என்ற பெயரில் இந்த வழக்கில் இழுத்துவிடுவதாகக் கூறியுள்ளார். இவரது மனுவை திங்கள் கிழமை நீதிமன்றம் விசாரிக்கும் என்று தெரிகிறது.
இந்த வழக்கில், விசாரணை இறுதிக் கட்டத்தை அடைந்துள்ளது. இதனிடையே, இந்த வழக்கில் மேலும் சிலர் கைதாகக் கூடும் என்று வதந்திகள் உலவிக் கொண்டுள்ளன. முன்னதாக, இந்த வழக்கில் முக்கியக் குற்றவாளியான பல்சர் சுனில், தாம் காவ்யாவின் வில்லாவுக்குச் சென்றுள்ளதாக போலீஸாரிடம் கூறியிருந்தார். அந்த வில்லாவுக்குச் சென்று, தனது பெயரையும் போன் நம்பரையும் பதிவேட்டில் குறித்து வந்ததாகவும் அவர் கூறியிருந்தார். மேலும், செய்தியாளர்கள் மத்தியில் பேசிய போது, காவ்யாவை தனது மேடம் என்று பல்சர் சுனில் குறிப்பிட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
