காசி தமிழ் சங்கமம்: டிச.,15இல் வாரணாசிக்கு கிளம்பும் முதல் சிறப்பு ரயில்!
காசி தமிழ் சங்கமம் நிகழ்ச்சிக்கான முதல் சிறப்பு ரயில் வருக்கிற 15ஆம் தேதி சென்னையில் இருந்து கிளம்புகிறது
கலாச்சார மையங்களாகத் திகழ்ந்த வாரணாசிக்கும், தமிழ்நாட்டிற்கும் இடையேயான பிணைப்பைப் புதுப்பிக்கும் வகையில் காசி தமிழ் சங்கமத்தின் முதல் நிகழ்வு கடந்த 2022ஆம் ஆண்டு நவம்பர் 16 முதல் டிசம்பர் 16ஆம் தேதி வரை நடைபெற்றது. தமிழ்நாட்டிலிருந்து பல்வேறு தரப்புகளைச் சேர்ந்த 2,500-க்கும் மேற்பட்டோர் வாரணாசி, பிரயாக்ராஜ் மற்றும் அயோத்திக்கு எட்டு நாள் சுற்றுப்பயணம் செய்து வாரணாசி, அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் வாழ்க்கையின் வெவ்வேறு அம்சங்களைப் பற்றி மிகச்சிறந்த அனுபவங்களை பெற்றனர்.
அதன் தொடர்ச்சியாக, ஒரே பாரதம் உன்னத பாரதம்' திட்டத்தின்கீழ் காசி தமிழ் சங்கமத்தின் இரண்டாம் கட்ட நிகழ்வு மார்கழி மாத முதல்நாளான வருகிற டிசம்பர் மாதம் 17ஆம் தேதி தொடங்கி டிசம்பர் 30ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது. இதில் கலந்து கொள்வதற்கான விண்ணப்பப் பதிவு முடிந்து நபர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
காசி தமிழ் சங்கமத்தின் இரண்டாம் கட்டத்தில், தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் இருந்து சுமார் 1,400 பேர் வாரணாசி, பிரயாக்ராஜ், அயோத்தி ஆகிய இடங்களுக்கு ரயிலில் சென்றுவர 8 நாள் பயணம் திட்டமிடப்பட்டுள்ளது. மாணவர்கள், ஆசிரியர்கள், விவசாயிகள், கைவினைக் கலைஞர்கள், வர்த்தகர்கள், வணிகர்கள், மதம் சார்ந்தவர்கள், எழுத்தாளர்கள், தொழில் வல்லுநர்கள் ஆகியோர் அடங்கிய தலா 200 பேர் கொண்ட ஏழு குழுக்களாகப் பிரித்து அனுப்பப்படவுள்ளனர்.
சென்னையில் ரேஷன் கார்டு வைத்திருக்கும் அனைவருக்கும் ரூ.6000: அமைச்சர் தங்கம் தென்னரசு தகவல்!
இந்த நிலையில், காசி தமிழ் சங்கமம் நிகழ்ச்சியில் கலந்து கொள்ளும் முதல் குழுவை ஏற்றிக் கொண்டு வாரனாசிக்கு முதல் சிறப்பு ரயிலானது சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் இருந்து கிளம்பவுள்ளது. அன்றைய தினம் காலை 10.45 மணிக்கும் கிளம்பும் இந்த ரயிலானது 17ஆம் தேதி அதிகாலை 4.30 மணிக்கு வாரணாசி சென்றடையும். மறுமார்க்கத்தில் வாரணாசியில் இருந்து முதல் சிறப்பு ரயிலானது 20ஆம் தேதி இரவு 11.20 மணிக்கு கிளம்பி சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்துக்கு 22ஆம் தேதி மாலை 4.45 மணிக்கு வந்தடையும். இதுதவிர இதர ரயில்களுக்கான அட்டவணையை https://kashitamil.iitm.ac.in/ என்ற இணையப் பக்கத்தில் தெரிந்து கொள்ளலாம்.
ரயிலில் புறப்பட்டுச் செல்லவும்- திரும்பி வரவும் தலா 2 நாட்கள், வாரணாசியில் 2 நாட்கள், பிரயாக்ராஜ் மற்றும் அயோத்தியில் தலா ஒருநாள் என குழுவினருக்கான பயணத் திட்டம் வகுக்கப்பட்டுள்ளது. கலை- கலாச்சாரம், கைத்தறி, கைவினைப் பொருட்கள், உணவு வகைகள், தமிழ்நாடு மற்றும் காசியின் சிறப்புத் தயாரிப்புகளை காட்சிப்படுத்தும் விற்பனை அரங்குகள் அமைக்கப்படும். வாரணாசியில் உள்ள நமோகாட்-டில் தமிழ்நாடு, காசியின் கலாச்சாரங்கள் சங்கமிக்கும் கலாச்சார நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்யப்படவுள்ளது.