தமிழக நாளிதழின் அலுவலகங்கள் தாக்கப்பட்டபோது மௌனம் காத்தவர் கருணாநிதி எனவே கருத்துச் சுதந்திரம் குறித்து அவர் பேசுவதை ஏற்கமுடியாது என தமிழக பாஜக தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் கூறினார்.
குலசேகரத்தில் நடைபெற்ற மாவட்ட பாஜக விவசாய அணி செயற்குழுக் கூட்டத்தில் தமிழக பாஜக தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் பங்கேற்க வந்தார்.
அப்போது அவர் செய்தியாளர்களிடம், “தமிழகத்தில் விவசாயிகள் தற்கொலை செய்வது மிகுந்த வேதனையை அளிக்கிறது. விவசாயிகளின் தற்கொலையை காவிரி விவகாரத்துடன் முடிச்சு போடுவது சரியல்ல.
தமிழக அரசின் நெல் கொள்முதல் மையங்களுக்கு விவசாயிகள் கொண்டு செல்லும் நெல்லில் அதிக ஈரப்பதம் இருப்பதாகக் கூறி நெல்லை கொள்முதல் செய்யவில்லை. இதனால் விவசாயிகள் குறைந்த விலைக்கு நெல்லை தனியாரிடம் விற்கும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.
காவிரி மேலாண்மை வாரியத்தை மத்திய அரசு நிச்சயமாக சட்டப்பூர்வமாக அமைக்கும்.
காவிரியிலிருந்து தமிழகத்துக்கு விநாடிக்கு 2000 கன அடி தண்ணீர் திறக்க வேண்டுமென உச்சநீதி மன்றம் கர்நாடக அரசுக்கு உத்தரவிட்டும், அந்த மாநில அரசு அதை நடைமுறைப் படுத்தவில்லை. இதற்கு கர்நாடகத்தில ஆளும் காங்கிரஸ் அரசை தமிழக காங்கிரஸ் கட்சி கண்டிக்கவில்லை.
100 நாள் வேலைத்திட்டத்தை பாஜக அரசு முடக்குகிறது என்று கூறுவது சரியல்ல. இத்திட்டத்தை விரிவுபடுத்தி மேலும் சிறப்பாக நடத்துவதற்கு பாஜக அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது.
தனியார் தொலைக்காட்சி நிறுவனத்துக்கு ஒரு நாள் தடைவிதித்த விவகாரத்தில், கருணாநிதி 2-வது அவசர நிலை ஞாபகம் வருகிறது என்று கூறுகிறார். கருத்துச் சுதந்திரம் குறித்து கருணாநிதி கூறுவது ஏற்புடையதல்ல.
ஏனென்றால் தமிழகத்தில் நாளிதழ்களின் அலுவலகங்கள் தாக்கப்பட்டது உள்ளிட்ட பல்வேறு சம்பவங்களின் போது அவர் கருத்துச் சொல்லாமல் மெளனமாகவே இருந்தார்.
பொங்கல் பண்டிகைக்கு தமிழகத்தில் ஜல்லிக்கட்டு நடக்கும். அதற்காக மத்திய இணை அமைச்சர் பொன்.இராதாகிருஷ்ணன் கடும் முயற்சி மேற்கொண்டு வருகிறார் என்று அவர் தெரிவித்தார்.
