கர்நாடக அணைகளில் இருந்து காவிரியில் தண்ணீர் திறந்து விடப்பட்டதையடுத்து மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 4,013 கனஅடியாக அதிகரித்துள்ளது.

உச்சநீதிமன்ற உத்தரவையடுத்து கடந்த 3ம்தேதி இரவு முதல் கர்நாடக மாநிலத்தில் உள்ள கிருஷ்ணராஜசாகர், கபிணி அணைகளில் இருந்து விநாடிக்கு 10 ஆயிரம் கனஅடி தண்ணீர் திறக்கப்பட்டது.

இந்த தண்ணீர் கர்நாடக மாநிலத்தில் மாண்டியா பகுதி விவசாயத்திற்கும், பெங்களூர் நகர குடிநீருக்காகவும் மட்டுமே திறக்கப்பட்டது என்று கர்நாடக அரசு கூறி வருகிறது. இதில் எஞ்சிய நீரே தமிழகத்திற்கு மிஞ்சியது.

நேற்று முன்தினம் தமிழக எல்லையான பிலிகுண்டுலுவுக்கு வினாடிக்கு 9 ஆயிரம் கனஅடி நீர் வந்தது. நேற்று காலை அது விநாடிக்கு 7 ஆயிரம் கனஅடியாக குறைந்தது. மேட்டூர் அணைக்கு நேற்று விநாடிக்கு 4,013 கனஅடி தண்ணீர் வந்து கொண்டிருந்தது.

டெல்டா மாவட்டங்களில் சம்பா சாகுபடிக்காக, விநாடிக்கு 12 ஆயிரம் கனஅடி வீதம் தண்ணீர் திறக்கப்பட்டது. நேற்று அணையின் நீர்மட்டம் 74.65 அடியாகவும், நீர் இருப்பு 36.83 டி.எம்.சியாகவும் உள்ளது.