கந்த சஷ்டி விழா தொடங்கியது... முருகன் கோயில்களில் கோலாகலம்!
கந்த சஷ்டி விழா இன்று அனைத்து முருகன் கோயில்களிலும் கோலாகலமாக தொடங்கியது. இதையொட்டி ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்து வருகின்றனர்.
கந்த சஷ்டி விழா இன்று அனைத்து முருகன் கோயில்களிலும் கோலாகலமாக தொடங்கியது. இதையொட்டி ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்து வருகின்றனர்.
இந்நிலையில், தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் முருகன் கோயிலில், புகழ்பெற்ற கந்த சஷ்டி விழா இன்று காலை தொடங்கியது. முருகனின் அறுபடை வீடுகளில் 2ம் படை வீடான திருச்செந்தூரில் இன்று காலை தொடங்கிய கந்த சஷ்டி விழாவை முன்னிட்டு ஏராளமான பக்தர்கள் கடலில் புனித நீராடி தங்கள் விரதத்தைத் தொடங்கினர்.
வெளியூர்களில் இருந்து வந்த பக்தர்கள் கோயிலில் தங்கி விரதம் மேற்கொண்டனர். கந்தசஷ்டியை முன்னிட்டு இன்று அதிகாலை ஒரு மணிக்கு நடை திறக்கப்பட்டு ஒன்றரை மணிக்கு விஸ்வரூப தரிசன நிகழ்ச்சி நடந்தது.
தொடர்ந்து 2 மணிக்கு உதய மார்த்தாண்ட அபிஷேகமும், 5.30 மணிக்கு சுவாமி ஜெயந்திநாதர் வள்ளி தெய்வானை அம்பாளுடன் யாகசாலை மண்டபத்தில் எழுந்தருளினார். இன்று காலையில் ஏராளமான பக்தர்கள் அங்கப்பிரதட்சணம் செய்து வழிபட்டனர். முக்கிய நிகழ்ச்சியான சூரசம்ஹாரம் வருகிற 13ம் தேதி திருச்செந்தூர் கடற்கரையில் நடைபெறுகிறது.