Asianet News TamilAsianet News Tamil

மத்திய அரசின் திட்டத்தால் இலவச மின்சாரத்திற்கு பாதிப்பு - கனிமொழி எச்சரிக்கை

ஒன்றிய அரசு கொண்டுவந்த உதய் மின் திட்டத்தால் விவசாயிகளுக்கு இலவச மின்சாரத்தைக் கொடுக்க முடியாத நிலையை உருவாக்கும் என திமுக வேட்பாளர் கனிமொழி தெரிவித்துள்ளார்.

Kanimozhi said that the free electricity provided to agriculture by the central government's Uday Power scheme is affected vel
Author
First Published Apr 9, 2024, 11:11 PM IST

தமிழ்நாட்டில் ஏப்ரல் 19ம் தேதி நடைபெற உள்ள நாடாளுமன்றத் தேர்தலை முன்னிட்டு, இன்று ராமநாதபுரம் மாவட்டம், மாரியூர் ஊராட்சியில் ராமநாதபுரம் நாடாளுமன்றத் தொகுதி இந்தியா கூட்டணி சார்பில் இந்திய யூனியன் முஸ்லிம் கட்சி வேட்பாளர் நவாஸ் கனியை ஆதரித்து திமுக துணைப் பொதுச் செயலாளர் கனிமொழி ஏணி சின்னத்திற்கு வாக்கு சேகரித்தார். இதில், அமைச்சர் ராஜ கண்ணப்பன், உள்பட மு்ககிய நிர்வாகிகள் உடனிருந்தனர்.

பிரச்சாரத்தில் பேசிய கனிமொழி, நம்முடைய வேட்பாளர் நவாஸ் கனி தொடர்ந்து உங்களுடைய கோரிக்கைகளை, இந்த தொகுதியின் பிரச்சினைகளை, மக்களின் தேவைகளைத் தொடர்ந்து நாடாளுமன்றத்தில் பேசக்கூடிய ஒரு உறுப்பினர். இந்த தேர்தல் வெறும் அரசியல் மாற்றத்திற்கான தேர்தல் இல்லை. அதையும் தாண்டி இந்த நாட்டை யார் ஆளக்கூடாது என்று முடிவு செய்யக்கூடிய தேர்தல். எப்படி ஆங்கிலேயரிடம் போராடி இந்த நாட்டை மீட்டோமோ, அதே போல மறுபடியும் ஒரு விடுதலை போராட்டம் என்று எண்ணி இந்த தேர்தலில் வாக்கு அளித்து  பாஜக கைகளில் இருந்து இந்த நாட்டை மீட்டெடுக்க வேண்டும்.

பாஜக வேட்பாளர் நயினார் நாகேந்திரன் காரில் பறக்கும் படை அதிகாரிகள் அதிரடி சோதனை

பாஜக கூட்டணியை எதிர்த்து வாக்களிக்க வேண்டிய தேர்தல், அதிமுக என்ன ஆச்சுன்னு கேட்காதீர்கள். அதிமுக பாஜகவின் B-டீம். இவர்கள் இருவருக்கும் பெரிய வித்தியாசம் கிடையாது. இங்கே முன்னாள் முதலமைச்சர் ஓபிஎஸ் வேட்பாளராக நிறுத்தப்பட்டுள்ளார், இதே ஓபிஎஸ், ஈபிஎஸ் சேர்ந்து இஸ்லாமியர்களுக்கு எதிரான சட்டங்களை பாஜக கொண்டு வந்த போது அதற்கு ஆதரித்து வாக்களித்தனர். 

அதிமுக சிஏஏ சட்டத்தை ஆதரித்தனர், விவசாயிகளுக்கு எதிரான சட்டங்கள் கொண்டு வரும் போது அதை ஆதரித்தவர்கள். தொழில்களுக்கு எதிரான சட்டங்கள் கொண்டு வந்த போது அதையும் ஆதரித்தனர். இப்படி மக்களுக்கு எதிரான எல்லா சட்டங்களையும் ஆதரித்து, உதய் மின் திட்டம் கொண்டு வரப்பட்ட பொது அதனையும் ஆதரித்து கையெழுத்துப் போட்டார்கள். அந்த திட்டத்தின் மூலம் விவசாயிகளுக்குத் தலைவர் கலைஞர் கொடுத்த இலவச மின்சாரத்தைக் கொடுக்க முடியாத நிலையை உருவாக்கும். இப்படி சாதாரண மக்களுக்கு எதிரான அரசாங்கம் தான் இந்த பாஜக என்பது புரிந்து கொள்ள வேண்டும்.

சாதாரண மக்களுக்கு எதுவும் செய்ய மாட்டார்கள், பெரிய பெரிய கார்பெரேட் நிறுவனங்கள், அதானி, அம்பானி அவர்களுக்கு தான் பாஜக ஆட்சி நடக்கிறது.  இங்கே இருக்கக்கூடிய மீனவர்களை இலங்கை அரசு  பிடித்துக் கொண்டு போகிறது, கிட்டத்தட்ட 400 படகுகளை விட மாட்டேன் என்று பிடித்து வைத்திருக்கிறார்கள், 3,500 மீனவர்கள் சிறப்பிடிக்கப்பட்டார்கள், அப்போதெல்லாம் பிரதமர் பேச மாட்டார்.

பிரசாரத்தின் போது பெண்களை இழிவாக பேசிய அதிமுக எம்எல்ஏ; ஆத்திரத்தில் பிரசார வாகனத்தை உடைத்த மக்கள்

விவசாயிகளுக்கும், மாணவர்களுக்கும் கடன்களை ரத்து செய்ய மாட்டார், இதனால் பல விவசாயிகள் தற்கொலை செய்துள்ளனர். பெரிய கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு பாஜக 2014 முதல் 2023 வரைக்கும் கிட்டத்தட்ட 15 லட்சம் கோடி ரூபாய் கடன் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. நம் இந்தியா கூட்டணி ஆட்சி, மீண்டும் ஒன்றியத்தில் வந்ததும் 100 நாள் வேலையை 150 நாளாக ஆக்குவோம் என்றும்  சம்பளம் 400 ரூபாய் என்றும் அறிவித்துள்ளார் முதலமைச்சர். காங்கிரஸும் 400 ரூபாய் சம்பளம் என்று அறிவித்துள்ளது.

இந்த பகுதியில் குடிதண்ணீர் தட்டுப்பாட்டுப் பிரச்சனை இருந்து, ரூ. 600 கோடிக்கு மேல் நிதி ஒதுக்கி இந்த பகுதியில் இருக்கக்கூடிய மக்களுக்குத் தண்ணீர் கொண்டு வந்தது தலைவர் கலைஞர். கடல் நீரைக் குடிநீர் ஆக்கும் திட்டத்தின் வழியாகப் பல நூறு கிராமங்கள் பலன் அடைந்து உள்ளன. முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ரூ. 2,510 கோடி நிதி ஒதுக்கீடு செய்து கரூரிலிருந்து தண்ணீர் கொண்டு வரப்படும் என்று தெரிவித்தார்.

மக்களைப் பிரித்து ஆட்சி செய்ய வேண்டும் என்று நினைத்துக் கொண்டு இருக்கும் பாஜக ஆட்சியை இந்தியாவிலிருந்து அகற்றப்பட்டால் தான் அனைவரும் நிம்மதியாக வாழ முடியும். அப்போது தான் வளர்ச்சி திட்டங்கள் வரும் என்பதைப் புரிந்து கொண்டு இந்த தேர்தலில் நீங்கள் நமது வேட்பாளர் நவாஸ் கனி அவர்களுக்கு ஏணி சின்னத்தில் வாக்களித்து வெற்றி பெறச் செய்ய வேண்டும் என்று பேசினார்.

Follow Us:
Download App:
  • android
  • ios