Asianet News TamilAsianet News Tamil

சர்ச்சைக்குரிய வகையில் பேசியதாக வழக்குப்பதிவு… முன்ஜாமீன் கோரி கணல் கண்ணன் மனு!!

சர்ச்சைக்குரிய வகையில் பேசியதாக பதிவு செய்யப்பட்ட வழக்கில் முன் ஜாமின் கோரி, இந்து முன்னணி நிர்வாகியும், சினிமா ஸ்டண்ட் மாஸ்டருமான கனல் கண்ணன் சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார். 

kanal kannan plea for anticipatory bail at chennai court
Author
Chennai, First Published Aug 8, 2022, 11:02 PM IST

சர்ச்சைக்குரிய வகையில் பேசியதாக பதிவு செய்யப்பட்ட வழக்கில் முன் ஜாமின் கோரி, இந்து முன்னணி நிர்வாகியும், சினிமா ஸ்டண்ட் மாஸ்டருமான கனல் கண்ணன் சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார். முன்னதாக தமிழகம் முழுவதும் இந்து முன்னணி சார்பில் இந்துக்கள் உரிமை மீட்பு பிரச்சாரம் என்ற பயணம் தொடங்கி நடைபெற்ற நிலையில் அதன் நிறைவு விழா சென்னை அருகே நடைபெற்றது. அதில் இந்து முன்னணி நிர்வாகியும் திரைப்பட ஸ்டண்ட் மாஸ்டர் கனல்கண்ணன் கலந்துக்கொண்டு பேசினார். அப்போது, ஸ்ரீரங்கம் கோவிலில் சாமி தரிசனம் செய்து விட்டு வெளியில் வரும்போது அங்கு ஒரு சிலை இருக்கிறது. அதில் கடவுள் இல்லை என எழுதப்பட்டிருக்கிறது. அந்த சிலை எப்போது உடைக்கப்படுகிறதோ அதுதான் இந்துக்களின் எழுச்சி நாளாக இருக்கும் என்று தெரிவித்தார். அவரின் இந்த கருத்து சர்ச்சையானது.

இதையும் படிங்க: திமுகவுக்கு ஜால்ரா போடுற வேலை எல்லாம் வேணாம்.. சூரி முறையா மன்னிப்பு கேள்.. இந்து மக்கள் கட்சி .

இதுதொடர்பாக தந்தை பெரியார் திராவிடர் கழகத்தின் மாவட்ட செயலர் குமரன் சென்னை மாநகர காவல் ஆணையரகத்தில் புகார் அளித்தார். இந்த புகார் தொடர்பாக கனல் கண்ணன் மீது கலகம் செய்ய தூண்டிவிடுதல், அமைதியை சீர்குலைக்கும் வகையில் செயல்படுதல் ஆகிய பிரிவுகளின் கீழ் சென்னை சைபர் க்ரைம் காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்தனர். இந்த நிலையில் தன் மீதான வழக்கில் முன் ஜாமின் கோரி சென்னை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் கனல் கண்ணன் மனுத் தாக்கல் செய்துள்ளார். அவரது மனுவில், தினமும் ஒரு லட்சம் பக்தர்களுக்கு மேல் தரிசிக்க வரும் ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவில் வாசலில், கடவுளை கொச்சைபடுத்தும் வகையிலான வாசகங்களுடன் வைக்கப்பட்டிருக்கும் சிலையும், அந்த வாசகங்களும் பக்தர்களின் மனதை புண்படுத்தும் வகையில் இருப்பதாலேயே அதை இடிக்க வேண்டுமென பேசினேன்.

இதையும் படிங்க: ஆதிச்சநல்லூர் அகழாய்வில் தங்கம், வெண்கலம் கண்டெடுப்பு.. தங்கத்திலான பட்டயம் கிடைத்ததாக தகவல்

நான் பேசியது இந்த நாட்டின் சட்டத்திற்கு புறம்பானது ஏதும் இல்லை. சிலையில் இருந்த வாசகங்கள் தான் இந்திய தண்டனை சட்டத்தின் கீழ் தண்டிக்கப்பட வேண்டிய குற்றம். மேலும் கோவிலின் முன் அந்த சிலையை வைத்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்காத காவல்துறை, துரதிஷ்டவசமாக என் மீது வழக்குப்பதிவு செய்துள்ளது. சமீப காலமாக இந்து மத கடவுள்கள் மற்றும் நம்பிக்கைகளுக்கு எதிராக பல வீடியோ பதிவுகள் பதிவிடப்படுகிறது. அவை தொடர்பாக தனி நபர்களும், அமைப்புகளும் புகார் அளித்தும் நடவடிக்கை எடுப்பதில்லை என்றும் அவர் தனது மனுவில் குறிப்பிட்டுள்ளார். இந்த மனு ஓரிரு நாட்களில் விசாரணைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

Follow Us:
Download App:
  • android
  • ios