கள்ளச்சாராயம் அற்ற மாநிலமாக தமிழ்நாட்டை மாற்ற வேண்டும் - அரசுக்கு மநீம தலைவர் கமல்ஹாசன் வலியுறுத்தல்
கள்ளச்சாராயம் அற்ற மாநிலமாக தமிழ்நாட்டை மாற்ற வேண்டுமென மக்கள் நீதி மய்யம் சார்பில் கமல்ஹாசன் வலியுறுத்தி உள்ளார்.
விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் அடுத்த எக்கியார்குப்பம் பகுதியில் கள்ளச்சாராயம் குடித்ததில் 10க்கும் மேற்பட்டோர் பரிதாபமாக உயிரிழந்தனர். இந்த சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது. கள்ளச்சாராயம் குடித்த மேலும் சிலர் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளனர். இச்சம்பவத்தை அடுத்து கள்ளச்சாரயம் உற்பத்தி செய்வோர் மீது கடும் நடவடிக்கை எடுக்க முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.
கள்ளச்சாராயம் குடித்து உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு தலா 10 லட்சம் நிதி உதவி வழங்கப்படும் என்றும், சிகிச்சை பெற்று வருபவர்களுக்கு ரூ.50 ஆயிரம் நிதியுதவி வழங்கப்படும் எனவும் முதல்வர் அறிவித்துள்ளார். இந்த விவகாரம் குறித்து பல்வேறு அரசியல் கட்சி தலைவர்களும் அறிக்கை வெளியிட்ட வண்ணம் உள்ளனர். அந்த வகையில் மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசனும் அறிக்கை வெளியிட்டுள்ளார்.
இதையும் படியுங்கள்... டாஸ்மாக் மது வணிகத்தில் கலால்வரி ஏய்ப்பா? சி.பி.ஐ விசாரணை நடத்தனும்- திமுக அரசை சீண்டும் அன்புமணி
அதில், விழுப்புரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் கள்ளச்சாராயம் குடித்த 10-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்த செய்தி, உயிரிழந்தோர் குடும்பத்தினருக்கு இரங்கலையும், ஆறுதலையும் தெரிவித்துவிட்டு எளிதாக கடந்து போகக்கூடிய ஒன்றல்ல. இதுபோன்ற கோரசம்பவங்கள் நடந்தவுடன், தீவிர நடவடிக்கை எடுப்பதும், பின் அலட்சியமாக இருப்பதும் பலநேரங்களில் நடந்திருப்பதை நாம் அறிவோம்.
இப்போது அப்படியில்லாமல் தமிழ்நாடு காவல்துறை, கள்ளச்சாராயம் தயாரிப்போர், விற்பனை செய்வோர், விற்பனைக்குத் துணைபோவோர் உள்ளிட்ட அனைவர்மீதும் எடுக்கும் நடவடிக்கை தொடர்ந்து தொய்வில்லாமல் நடக்க வேண்டும். கள்ளச்சாராயம் அற்ற மாநிலமாக தமிழ்நாட்டை மாற்ற வேண்டுமென மக்கள் நீதி மய்யம் வலியுறுத்துகிறது” என அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டு உள்ளது.
இதையும் படியுங்கள்... அவங்க ஒத்துழைப்பு இல்லாமல் கள்ளச்சாராய விற்பனை நடந்திருக்கவே முடியாது.. அடித்து கூறும் திமுக கூட்டணி கட்சி..!