பீட்டாவை தடை செய்ய வேண்டும் என்ற கோரிக்கைக்கு பதிலளித்த கமல் அது தேவை இல்லை , வரைமுறை படுத்தினாலே போதும் என்று 

ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக தமிழகம் முழுவதும் வரலாறு காணாத அளவு மிகப்பெரிய போராட்டம் நடைபெற்றது. சென்னை மெரினாவில் லட்சக்கணக்கான மாணவர்களும், இளைஞர்களும் உணர்ச்சிமிகு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

அந்த போராட்டத்தின் காரணமாக தமிழக அரசு ஜல்லிக்கட்டு நடத்துவதற்கு அவசர சட்டம் ஒன்றை இயற்றி உடனடியாக சட்டப் பேரவையில் நிறைவேற்றப்பட்டது.

இதையடுத்து அலங்காநல்லுர், அவனியாபுரம், பாலமேடு ஆகிய பகுதிகளில் ஜல்லிக்கட்டுக்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன. இந்த போட்டத்தின் போது கமல் தனது டுவிட்டர் பக்கத்தில் தொடர்ந்து ஜல்லிக்கட்டுக்கு ஆதரவு தெரிவித்து வந்தார்..

ஜல்லிக்கட்டுக்கு தடை விதித்தால் பிரியாணிக்கும் தடை விதிக்கவேண்டும் என தெரிவித்து சர்ச்சையை எழுப்பினார். மேலும் நேற்று சென்னையில் நடைபெற்ற வன்முறைக்கு கண்டனம் தெரிவித்தார்.

 ஜல்லிக்கட்டு விளையாட்டு நடத்த வேண்டும் என அறவழி போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மாணவர்கள் மீது போலீசார் தாக்குதல் நடத்துவதால் நல்ல முடிவை தராது. அலங்காநல்லூரை அலங்கோலமாக்கிய வன்முறை, தமிழக அறப்போராட்ட சரித்திரத்தில் பெரிய ரத்தக்கரை எனவும் குறிப்பிட்டிருந்தார்.

இந்நிலையில் சென்னையில் இன்று செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த கமல். சென்னையில் நிகழ்ந்த வன்முறை அதிர்ச்சி அளிப்பதாக இருந்தது. அதேநேரத்தில் தமிழ் கலாச்சாரத்தின் மீதான ஊடுருவலை ஒரு நாளும் அனுமதிக்க முடியாது என தெரிவித்தார்.

எம்.ஜி.ஆர். இப்போது நம்மிடம் இருந்திருந்தால் போராட்டக் களத்துக்கு வந்திருப்பார். போராட்டக் களத்தில் உள்ளே நுழைவதற்கு அவருக்கு அனுமதி மறுக்கப்பட்டிருந்தாலும் பின்வாங்கியிருக்கமாட்டார். அவர்கள் எதிரே அமர்ந்து உண்ணா நோன்பு மேற்கொண்டிருப்பார் என தெரிவித்தார்

எங்களுடைய தமிழ்க் கலாசாரத்தில் சட்டம் ஊடுருவியுள்ளது. ஜல்லிக்கட்டு விவகாரத்தில் இரட்டை நிலைப்பாடு கடைப்பிடிக்கப்படுகிறது என குற்றம் சாட்டினார்.

இளைஞர்களின் போராட்டத்தின் மீது கட்சி சாயம் பூசப்படுவதை ஏற்கமுடியாது. போராட்டத்தில் பெண்கள் பாதுகாப்பாக இருந்தார்கள். உண்மையை யாராலும் மறைக்கமுடியாது. அதிருப்தியின் அடையாளம்தான் இந்தப்போராட்டம் என்றும் தெரிவித்தார்.

பீட்டாவை தடை செய்ய தேவை இல்லை அதை வரைமுறை படுத்தினாலே போதும் என்று கமல் தனது பேட்டியில் தெரிவித்தார்.