TN BJP: சீனியர்களை தனியாக அழைத்து அவமானப்படுத்தியது, மிரட்டியது.! அண்ணாமலையின் மனோவியாதி- விளாசும் கல்யாணராமன்
20000 புத்தகங்கள் படித்திருக்கிறேன், 2 லட்சம் வழக்குகளை பார்த்திருக்கிறேன், 600 கற்பழிப்பு வழக்குகளை கையாண்டு இருக்கிறேன் என வாய்கூசாமல் பொய் பேசி இதன் மூலமாக தன்னை ஒரு ஹீரோவாக சமூகம் பார்க்கும் என மனப்பிராந்தி அண்ணாமலை என்ற நபரின் அடிநாதம் என கல்யாணராமன் விமர்சித்துள்ளார்.
1000கோடி கொள்ளை
தமிழக பாஜகவில் அண்ணாமலைக்கு எதிராக கருத்து தெரிவித்த மூத்த நிர்வாகியான கல்யாணராமன் ஒரு வருடத்திற்கு கட்சியில் இருந்து நீக்கப்பட்டுள்ளார். இந்த நிலையில் மீண்டும் அண்ணாமலைக்கு எதிராக கடும் விமர்சனத்தோடு சமூகவலைதளத்தில் தனது கருத்தை பதிவிட்டுள்ளார். அதில், 10000 கோடிகள் அண்ணாமலை கொள்ளையடித்தாக திருச்சி சூர்யா குற்றம் சாட்டுவதை பார்த்த பின்னர் வரும் முதல் கேள்வி ஏன் அண்ணாமலை மௌனம் காக்க வேண்டும்?! சூர்யா கூறியதில் எனக்கு முழுமையான நம்பிக்கை இல்லாவிட்டாலும் நிச்சயமாக அந்த தொகை மூன்று பூஜ்ஜியங்களை கொண்டதாக இருக்கும் என்பதை நான் அறிவேன்.
அண்ணாமலை பயந்தாங்கொள்ளி
காரணம் ஆரம்ப காலத்தில், இஜட் கேட்டகிரி பாதுகாப்பு வருவதற்கு முன்பே ரெசிடென்சி ஓட்டலில் காபி சாப்பிட செல்வதாக சென்று பேஸ்மெண்டில் ஒளிந்து இருந்த காரில் சென்று மருமகனை மூன்று முறை சந்தித்து செய்து கொண்ட பாஜக-அதிமுக கூட்டணியை முறிப்பேன் என்ற ஒப்பந்தம். அக்கா தமிழிசை மீது வன்மத்தை கக்க வேண்டும் என தன்னை தூண்டியது அண்ணாமலை என்று சூர்யா கூறுவதில் உண்மை இருப்பதாகவே பார்க்கிறேன். அப்படி என்றால் அண்ணாமலை ஒரு பயந்தாங்கொள்ளி என்பது தெளிவாகிறது. தனக்கு தகுதியை மீறி கிடைத்த பதவியை காப்பாற்றிக் கொள்ள போட்டியாக பிற்காலத்தில் வரவாய்ப்புள்ள நபர்களை கட்சியில் இருந்து ஓரம்கட்ட வேண்டும் என அண்ணாமலை திட்டமிட்டது கட்சிக்குள் அனைவருக்கும் தெரியும்,
அண்ணாமலையின் தலைமையின் கீழ் பாஜக வளராது
அதில் ஓரளவு வெற்றியும் பெற்ற நிலையில் புதிதாக திரும்ப வந்த டாக்டர் தமிழிசை தனக்கு தலைவலியாக வருவார் என்பதால் அவரையும், மாநில தலைவருக்கு தகுதியான நபராக அறியப்படும் பேராசிரியர் சீனிவாசன் அவர்களையும் சூர்யா தொடர்ந்து தாக்கியது எப்படி?! கட்சிக்குள் ரகசியமாக மாநில தலைவருக்கு புகாராக வந்த ஆடியோக்கள் சூர்யாவிடம் சென்றது எப்படி? முக்குலத்தோரில் முக்கிய நபராக அறியப்படும் அண்ணன் நயினார் நாகேந்திரன் மீது 4 கோடி பணம் குறித்த பிரச்சனை உருவாக்க காரணம் யார்?!
ஆலமரத்தின் எதுவும் முளைக்காது; அண்ணாமலையின் தலைமையின் கீழ் பாஜக வளராது. அண்ணாமலையின் தகுதிக்கு சுடுகாட்டிற்கு தான் தலைவனாக இருக்க முடியும். ஏனென்றால், அங்குதான் கேள்வி கேட்காத ஜடங்கள் இருக்கும். அதிகபட்சம் அடிமைகளை வைத்து அண்ணாமலையால் கட்சி நடத்த முடியும். அண்ணாமலை அதிமுக பக்கம் திரும்பி விடக்கூடாது என்பதால் அதை கவனித்துக் கொள்ளும் பொறுப்பு ரவீந்திரன் துரைசாமி மற்றும் ஜெ. வி. சி, ஸ்ரீராம் அகியோருக்கு திமுகவால் வழங்கப்பட்டது. அவர்கள் இருவரும் அண்ணாமலையால தமிழகமே மாறப்போகிறது என்ற பிம்பத்தை வெறும் சமூக வலைத்தளங்களை வைத்து கட்டமைக்க முயற்சித்தனர்.
பைத்தியத்தின் கீழ் வேலை பார்ப்பது கடினம்
நான் முன்பே கூறியது தான். கோவை குண்டு வெடிப்பு சம்பவம், கூட்டணி உடைப்பு, ரகசிய வீடியோக்கள் என அனைத்தையும் திட்டமிட்டு செய்தது அண்ணாமலை தான். சீனியர்களை தனிப்பட்ட முறையில் அழைத்து அவமானப்படுத்தியது, மிரட்டியது என அண்ணாமலை செய்த பல செயல்களின் பின்னால் இருப்பது அண்ணாமைக்கு உள்ள "Sociopath" என்ற மனோவியாதி. அந்த வியாதியின் வெளிப்பாடுகளில் ஒன்று தான் வாய்கூசாமல் பொய் பேசுவது!!!
20000 புத்தகங்கள் படித்திருக்கிறேன், 2 லட்சம் வழக்குகளை பார்த்திருக்கிறேன், 600 கற்பழிப்பு வழக்குகளை கையாண்டு இருக்கிறேன் என வாய்கூசாமல் பொய் பேசி இதன் மூலமாக தன்னை ஒரு ஹீரோவாக சமூகம் பார்க்கும் என மனப்பிராந்தி அண்ணாமலை என்ற நபரின் அடிநாதம். ஒரு பைத்தியத்தின் கீழ் வேலை செய்வது என்பது கடினமான காரியம் என்பது பாஜகவின் அனைத்து தலைவர்களின் ஒட்டுமொத்த கருத்து. அதைத்தான் நான் பிரதிபலிக்கிறேன் என கல்யாணராமன் கடுமையாக விமர்சித்துள்ளார்.